search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் ஓவியம் செய்வதில் அசத்தும் பெண்
    X

    பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் செய்ய கற்றுக்கொடுக்கும் நாகலட்சுமி.

    தஞ்சாவூர் ஓவியம் செய்வதில் அசத்தும் பெண்

    • பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.
    • மாதம் ரூ 20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரையை சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி நாகலெட்சுமி (வயது 38). இவர்களுக்கு தீபஸ்ரீ என்ற மகள், சந்தோஷ் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்து ஒன்றில் சரவணன் இறந்து விட்டார். குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக இருந்த கணவர் சரவணன் இறந்தது நாகலெட்சுமியை நிலை குலைய செய்தது.

    எதிர்காலம் என்னவாகும் என்ற துயரத்தில் தவித்தவரை கரை சேர்த்திருக்கிறது தஞ்சாவூர் ஓவியம். முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் செய்வதற்கு கற்றுக் கொண்டவருக்கு அதுவே வாழ்வாதாரமாகவும் மாறியது.

    தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான, அழியும் நிலையில் இருக்க கூடிய பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியம் செய்வதை தன்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக பயிற்சி தந்து கற்றுக் கொடுத்து வருகிறார். வருமானத்திற்கு வழியின்றி தவித்து நின்ற பல பெண்கள் இதன் மூலம் பலனடைந்து வருகின்றனர்.

    இது குறித்து நாகலெட்சுமி கூறியதாவது :-

    பத்து வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். அவர் இருந்த வரை வீட்டு வாசலை கூட நான் தாண்டியதில்லை. திடீரென ஒரு நாள் எங்களை தவிக்க வைத்து மறைந்து விட்டார். ஆதரவாக இருக்க எந்த உறவும் முன்வரவில்லை. அனைத்தையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கினேன். அப்போது தான் கும்பகோணத்தில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வரும் சக்கரபாணி ஆர்ட்ஸ் உரிமையாளரான பன்னீர்செல்வம் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தருகிறார். அவர் கம்பெனியில் என்னை போல் கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்தார்.

    என் நிலையை அறிந்து கலை உலகிற்குள் அழைத்து சென்றார். எனக்கு முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தந்தார். சில ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்த நான் பின்னர் வீட்டிலேயே தனியாக தஞ்சாவூர் ஓவியம் தயாரிக்க தொடங்கினேன். மாதம் ரூ 20,000 வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது மகள் 10-ம் வகுப்பும், மகன் 8-வதும் படிக்கின்றனர்.

    என்னைப் போல் கணவரை இழந்த, சரியான வாய்ப்பு கிடைக்காமல் வறுமையுடன் போராடி கொண்டிருப்ப வர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் பயிற்சி கொடுக்க தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்கள் பலரும் இன்றைக்கு கை நிறைய சம்பாதிக்கின்றனர். சொந்தக்காலில் நிற்க நினைக்கும் பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் சிறந்த முறையில் கை கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×