என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசிய போது எடுத்த படம்.
அரசியல்வாதி போல் செயல்படும் கவர்னரை மாற்ற வேண்டும்-கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் பேட்டி
- பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் குடைச்சல் கொடுத்து மாநிலத்தில் கலவரத்தை உருவாக்க தமிழக கவர்னரை பயன்படுத்தி வருகிறார்.
- தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி உபரி கொண்டு வரும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு தருமபுரி பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மிகவும் வறட்சி மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகளில் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காவிரி உபரி நீர் திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற ஆகஸ்டு மாதம் 8, 9 தேதிகளில் ஒகேனக்கலில் இருந்து தருமபுரிக்கு நடை பயணம் மேற்கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வோம்.
தமிழக கவர்னர் எப்படி எல்லாம் செயல்பட கூடாதோ, எப்படி எல்லாம் சட்டவரம்புகளை மீறக்கூடாதோ அவற்றை எல்லாம் மீறி அவர் ஒரு அரசியல்வாதி போல் செயல்படுகிறார். பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் குடைச்சல் கொடுத்து மாநிலத்தில் கலவரத்தை உருவாக்க தமிழக கவர்னரை பயன்படுத்தி வருகிறார். அவரது எண்ணம் தமிழகத்தில் நிறைவேறாது.
எனவே பிரதமர் மோடி தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும். தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






