search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தின் பரிதாப நிலை
    X

    ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தின் பரிதாப நிலை

    • எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன.
    • கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் கடந்த 1989 -ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி தாலுகா அலுவலகம் தொடங்கப் பட்டது. அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தாலுகா அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற இந்த அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து பயன் அடைந்து வருகிறார்கள். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.

    2 அடுக்கு மாடியில் செயல்படும் இந்த தாலுகா அலுவலகத்தின் கட்டிட சுவர்களில் பல இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. மாடிகளின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழை பெய்தால் ஒழுகி தண்ணீர் அலுவலகத்தின் உள்ளே வருகிறது. இதனால் கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கம்ப்யூட்டர் அறையில் உள்ள மின் விசிறிகள் உடைந்து காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சின்னாபின்னமாக அகற்றப்படாமல் அலங்கோலமாக கிடக்கின்றன.

    மேலும் இங்கு செயல்படும் இ-சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அனுப்புவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதனால் அருகில் உள்ள தனியார் இ -ேசவை மையங்களில் பணம் கொடுத்து மனுக்களை பதிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் அறை மேல்தளத்தில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மேல்தளத்திற்கு நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே ஆதார் பதிவு மையத்தை கீழ்தளத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாலுகா அலுவலக வளாகத்தில் எங்கு பார்த்தாலும் முள்செடிகள், புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.

    அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலம் முறையாக பாராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. அங்கு சென்றால் அரசு அலுவலகத்துக்கு சென்றது போன்ற உணர்வு இல்லை. இதனை பராமரிக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதுமான கிராம நிர்வாகம், மற்றும் வருவாய் அலுவலர்கள் இல்லாததால் கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல வழியில்லாததால் வளாகம் முழுவதும் தேங்கி நிற்கிறது. தாலுகா அலுவலகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.

    கடந்த ஆண்டில் மட்டும் 18 தாசில்தார்கள் இங்கு பணியாற்றிவிட்டு இடம்மாறுதல் பெற்று சென்று உள்ளனர். எனவே ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×