search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள், விவசாயிகளுக்கு இலவசமாக 10.36 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு
    X

    பொதுமக்கள், விவசாயிகளுக்கு இலவசமாக 10.36 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு

    • கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள், விவசாயிகள் என 200 பேர் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர்.
    • வடகோவையில் மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள வனவியல் விரிவாக்க நர்சரியில் பெற்றுக்கொள்ளலாம்.

    கோவை:

    தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தை அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக கோவை வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் மதுக்கரை, வட கோவை, மேட்டுப்பாளையத்தில் நாற்றங்கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இவற்றை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, ஆனை மலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர், கள இயக்குநர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வனப் பாதுகாவலர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறியதாவது:-

    பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ்கோவையில் மொத்தம் 10.36 லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டு மட்டும் மொத்தம் 1.50 லட்சம் மரக்கன்று கள் வழங்கப்படும்.

    இதற்காக வட கோவையில் 85 ஆயிரம், மதுக்கரையில் 15 ஆயிரம், மேட்டுப்பாளையத்தில் 50 ஆயிரம் மரக்கன்று கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்களுக்கு நெல்லி, நாவல், புங்கம், செம்மரம், ஈட்டி, புளியமரம், கொடுக்காபுளி, வேம்பு உள்ளிட்ட மரங்களும், விவசாயிகளுக்கு தேக்கு, மலைவேம்பு, மகோகனி, சவுக்கு உள்ளிட்ட மரங்களும் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் நட்டு வளர்க்க மொத்தமாக மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டாலும் வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படுவோர் வடகோவையில் மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள வனவியல் விரிவாக்க நர்சரியில் பெற்றுக்கொள்ளலாம். இதுவரை சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுதவிர கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள், விவசாயிகள் என 200 பேர் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் முழு வீச்சில் வழங்கப்பட உள்ளன. மரக்கன்றுகள் தேவைப்படுவோர் 97916 61116 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×