search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி அருகே இளவட்டக்கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்
    X

    ஊட்டி அருகே இளவட்டக்கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்

    • இந்த ஆண்டுக்கான பண்டிகை, தலைகுந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
    • தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் குரும்பா், இருளா், காட்டுநாயக்கா், பனியா், தோடா், கோத்தா் என ஆறு பண்டைய பழங்குடிகள் வசித்து வருகின்றனா். இதில் தோடரின மக்கள் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

    இவா்கள் தங்களுடைய மந்துகளில் டிசம்பா் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ மொா்டுவொா்த் என்ற பாரம்பரியப் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனா்.

    இந்த ஆண்டுக்கான பண்டிகை, தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் தலைமை மந்தான தலைகுந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதில் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்துகொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன்போ மற்றும் ஓடையாள்போ கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

    கோவில் வளாகத்து க்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதால் தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து வழிபாடு நடத்தினா். மேலும் தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடி பழங்குடியின தெய்வத்தை வழிபட்டனா்.

    பின்னா் தோடரின இளைஞா்கள் இளவட்டக் கற்களைத் தூக்கி தங்கள் பலத்தை நிரூபித்தனா்.

    இளவட்டக்கல் 100 கிலோ எடைகொண்டதாகவும், முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    விழாக் காலங்களில் இந்தப் போட்டி நடைபெறும். ஊட்டியில் தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. வெண்ணெய் பூசப்பட்ட 75 கிலோ எடை கொண்ட கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி, அதனை தோலில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள்.

    இந்த விளையாட்டு நிறைவடைந்ததும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவா்கள் பிரியாவிடை பெற்று தங்களது சொந்த மந்துகளுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

    Next Story
    ×