என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
- மழை நீர் கால்வாயில் எந்த வித தடையும் இல்லாமல் வெளியேறுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்
- அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
தற்போது பவுர்ணமி மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பகல், இரவு நேரங்களில் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனை கருத்தில்கொண்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் சுகா தார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கிரிவலப்பாதை செங்கம் சாலை சந்திப்பு பகுதி, அடி அண்ணாமலை சீனிவாசா பள்ளி அருகில், வாயுலிங்கம் கோவில் அருகில், கோசாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் அருகில், சின்னக்கடை வீதியிலும் புதிதாக சுகாதார வளாகம் கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
மேலும் சின்ன கடை வீதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாயில் மழை சமயத்தில் மழைநீர் எந்த வித தடையும் இல்லாமல் முறையாக வெளியேறுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணா துரை எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் ஸ்ரீதரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி வேல், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், திருவண் ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, திருவண்ணாமலை ஒன்றியக் குழு துணை தலைவர் ரமணன், தி.மு.க. நிர்வாகிகள்
பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், கார்த்திவேல் மாறன், அருணை வெங்கட் உள்பட பலர் உடன் இருந்தனர்.