search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற முடிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற முடிவு

    • கழிவு அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும்.
    • துணை கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

    நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் கடந்த 2018-ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள ஆலை நிர்வாகம் அனுமதி கேட்ட நிலையில், அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது.

    இந்நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் விசாரணையின்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த கழிவுகள் அகற்றப்படவில்லை எனில் உபகரணங்கள் பாதிப்படையும் எனக் கூறப்பட்டது. அதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியை மேற்கொள்ள துணை கலெக்டர் தலைமையிலான 9 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாவும், ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதி கிடையாது எனவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×