என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் திருப்பூரில் டாக்டர் தற்கொலை
    X

    கோப்புபடம்.

    தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் திருப்பூரில் டாக்டர் தற்கொலை

    • அறைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
    • ஆடை கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    திருப்பூர் :

    தேனி மாவட்டம் கே.பி.ஆர்.நகரை சேர்ந்த மாடசாமி குணசேகரன் என்பவரின் மகன் ராஜேஸ் கண்ணா (வயது 29). மருத்துவப்படிப்பு படித்துள்ளார். இவர் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருப்பூர் வந்து தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணி செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து கடந்த 10 நாட்களாக தங்கியுள்ளார்.

    இந்தநிலையில் நேற்று காலை அவர் தங்கியிருந்த அறைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக விடுதியின் உரிமையாளர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு படுக்கையில், ராஜேஸ் கண்ணா உடல் அழுகிய நிலையில் ஆடை கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு காலி மதுபாட்டில்கள் அதிகம் இருந்தது.

    இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 21-ந் தேதி இரவு தான் தங்கியிருந்த அறைக்குள் சென்ற ராஜேஸ் கண்ணா அதன்பிறகு வெளியே வரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஸ் கண்ணாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தேனியில் இருந்து விரைந்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ராஜேஸ் கண்ணா ரஷியாவில் டாக்டருக்கு படித்துள்ளார். சொந்த ஊர் திரும்பிய பின்னர், இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கான இந்திய மருத்துவ கழகத்தின் தேர்வை எழுதியபோது குறைந்த மதிப்பெண்களில் தொடர்ந்து தேர்ச்சியடை யாமல் இருந்துள்ளார். 4 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதில் அவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தான் திருப்பூர் வந்த ராஜேஸ் கண்ணா, திருப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். அதில் கிடைத்த பணத்தை வைத்து அறையில் மது அருந்தியதாக தெரிகிறது. மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் அளவுக்கு அதிகமாக மது குடித்ததில் அவர் இறந்தாரா? இல்லை வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×