search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி பிரதான கால்வாய் உடைப்பு சீரமைப்பு  8-ந்தேதி முதல்  தண்ணீர் திறக்க முடிவு
    X

    கோப்பு படம்.

    அமராவதி பிரதான கால்வாய் உடைப்பு சீரமைப்பு 8-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முடிவு

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக ஜூலை 1 முதல் 15 வரை நீர் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த 13ந் தேதி, சாமராயபட்டி அருகே 10.2 மைல் பகுதியில் அண்டர் டனல் பகுதியில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பிரதான கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் துவங்கின. இரு புறமும் இருந்த மண் அகற்றப்பட்டு தளம் மற்றும் கரை பகுதிகள் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

    புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு வழக்கமாக ஆகஸ்டு 15-ந்தேதி நீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு ஜூலை 15ல் அணை நிரம்பியதால் ஆற்று மதகு பிரதான கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை ஏமாற்றிய நிலையில் தென்மேற்கு பருவமழையும் தீவிரமடையாமல் உள்ளது.

    இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களிலுள்ள கரும்பு, தென்னை, காய்கறி உள்ளிட்ட நிலைப்பயிரை காப்பாற்றும் வகையிலும் வழக்கமான நெல் உள்ளிட்ட பயிர் சாகுபடியை துவக்கவும் நீர் திறக்க வேண்டும் என புதிய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    அதன் அடிப்படையில் வருகிற 8-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×