என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு
- குரும்ப கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
- குலதெய்மான வீரபத்திரசாமி கோவில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஜெ.ஜெ.நகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குலதெய்மான வீரபத்திரசாமி கோவில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று காலை முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது.
பின்னர் இரவு 7 மணி அளவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி முனுசாமி காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தி வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் வீரபத்திரசாமி சரித்திர நாடகம் நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேங்காய் உடைக்கும் போது, தலையில் ரத்தமோ, வலியோ ஏற்படாது. இது போன்ற வினோத வழிபாடு மேற்கொள்ளும் போது வருடம் முழுவதும் உடல் நல கோளாறு ஏற்படாது எனவும், பஞ்சம் நீங்கி நாடு செழிப்படையும் என்பது ஐதீகம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.