search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் காட்சி. 

    மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

    • மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது.
    • 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

    தாராபுரம்,செப்.25-

    திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.

    இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று 47-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் மண்டியிட்டுபிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விரைவில் சென்னை தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி ,பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு ,திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வடிவேல் மற்றும் விவசாயிகள் 75க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×