என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மூலப்பொருட்கள் விலை உயா்வால் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிற்ப கலைக்கூடங்கள்
- அதிகபட்சமாக 100 அடி வரை ஒரே கல்லில் சிற்பம் செதுக்க முடியும் என்கின்றனா் இங்கு பணியாற்றும் சிற்பக்கலைஞா்கள்.
- கற்களை இடைத்தரகா்கள் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக்காகவும் வாங்கி பயன்படுத்துவதாலும் விலை அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தில் மகாபலிபுரம், காஞ்சிபுரம், சேலம், திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசி, நாமக்கல், பழனி, ஓசூா், திருவண்ணாமலை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2,500க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசியில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்புவரை 126 கலைக்கூடங்கள் செயல்பட்டு வந்தன. இந்த கலைக்கூடங்களில் 1,800க்கும் மேற்பட்ட சிற்பிகள் பணியாற்றி வந்தனா். இந்த கூடங்களில் இருந்து முருகன், விநாயகா், அம்மன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் மட்டுமின்றி பெரிய உணவகங்களில் அழகுக்காக வைக்கப்படும் ஆண், பெண் சிலைகள், வீட்டு உபயோகத்துக்காக அம்மிக்கல், குளவிக்கல், ஆட்டாங்கல் போன்றவையும் செதுக்கப்படுகின்றன.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் செதுக்கப்படும் சிலைகளை காட்டிலும் திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் செதுக்கப்படும் சுவாமி சிலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. இங்குள்ள கலைக்கூடங்களில் குறைந்தபட்சம் அரை அடியில் இருந்து அதிகபட்சமாக 100 அடி வரை ஒரே கல்லில் சிற்பம் செதுக்க முடியும் என்கின்றனா் இங்கு பணியாற்றும் சிற்பக்கலைஞா்கள்.
மூலப்பொருட்களின் விலை 60 சதவீதம் உயா்வு:
திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு பிரச்சினைகளால் 30க்கும் மேற்பட்ட கலைக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் மூலப்பொருட்கள் விலை உயா்வாகும். இந்த கலைக்கூடங்களுக்கு முன்பு வரையில் ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கற்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து செலவும் அதிகரிப்பு :
நாமக்கல் மாவட்டம் கொண்டம்பட்டி, காஞ்சிபுரம், நெல்லை மாவட்டத்தில் மயிலாடி ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே சிலை வடிப்பதற்காக கற்கள் கொண்டுவரப்படுகின்றன. சிலை வடிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக விலையும் சுமாா் 60 சதவீதம் உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக போக்குவரத்துச் செலவும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து திருமுருகன்பூண்டி சிற்பக் கலைஞா்கள் சங்க (அவிநாசி) தலைவா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: - கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த தொழில் சற்று சரிவை சந்தித்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில் கல்குவாரிகள் மூடப்பட்டு வருவதால் மூலப்பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கற்களை அதிக விலை கொடுத்து வாங்கிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு கன அடி கல்லை ரூ.300க்கு வாங்கினால்கூட பணிக்கூடத்துக்கு எடுத்துவருவதற்கு ரூ.600 வரையில் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தக் கற்களை இடைத்தரகா்கள் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக்காகவும் வாங்கி பயன்படுத்துவதாலும் விலை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு ஆா்டா்களும் இல்லை:
கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்னா் சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுவாமி சிலைகளுக்கு ஆா்டா்கள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்றுக்கு பின்னா் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவில் வெளிநாட்டு ஆா்டா்களும் வருவதில்லை. அதே வேளையில் சிற்பிகளுக்கான கூலியும் தற்போது உயா்ந்துள்ளது.
நன்றாக சிலை செதுக்க தெரிந்த 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிற்பிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 வரையும், 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிற்பிகளுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையிலும், உதவியாளா்களுக்கு ரூ.1,100ம் கூலியாக வழங்க வேண்டியுள்ளது. இந்த தொழிலுக்கு கண்பாா்வையும், உடல் உழைப்பும் அதிகமாக தேவைப்படுவதால் இளைஞா்கள் இந்த தொழிலில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனா். இதனால் தற்போது சிற்பிகளுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சிற்பிகளின் வாரிசுகள்கூட தற்போது பின்னலாடை உள்ளிட்ட வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்:
இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு மின்கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளது. சிற்பக்கலைக்கூடங்களுக்கான மின் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் உயா்ந்துள்ளதால் இந்த தொழிலை நடத்துவது மிகவும் சவாலான விஷயமாகவே உள்ளது. ஆகவே உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், சிற்பக் கலைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு, மாதாந்திர ஊக்கத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்