search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீரா பானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    நீரா பானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

    • தென்னை சாகுபடி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
    • திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருமளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    தென்னை சாகுபடி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.அதே வேளையில் ஆண்டுதோறும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்தவாறே உள்ளது.பிரதான சாகுபடியான தென்னையை பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகியுள்ளது.

    தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, நீரா உற்பத்திக்கு தமிழக அரசு 2018ல் அனுமதியளித்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக இப்பானம் உற்பத்தி துவங்கியது.தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையில் இருந்து பெறப்படும் நீரா பானம் பல்வேறு சத்துகளை உள்ளடக்கியது. மரத்தில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் குளுமையில் இந்த பானம் வடித்து எடுக்கப்படும்.தொடர்ந்து இப்பானத்தை அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், எலும்புக்கும் வலு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளும், பானத்தை அருந்தலாம் என அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நீரா பானத்திலிருந்து தென்னஞ்சக்கரை, சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டுப்பொருட்களை தயாரிக்க முடியும்.ஆனால் சில நடைமுறை சிக்கல்களால் நீரா பானத்தை நேரடியாக சந்தைப்படுத்த முடியவில்லை. இந்த பானத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. இவ்வாறு படிப்படியாக குறைந்த நீரா உற்பத்தி தற்போது முற்றிலுமாக முடங்கி விட்டது.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

    பல்வேறு சத்துகளை உள்ளடக்கிய நீரா பானம் அருந்துவது குறித்து அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதனால் மக்களும் உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள்.இப்பானம் உற்பத்தி மற்றும் விற்பனையிலுள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தலாம்.

    இதில் பெறப்படும் விபரங்கள் அடிப்படையில், நிபுணர் குழு வாயிலாக பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதுடன் தென்னை வளர்ச்சி வாரிய உதவியுடன் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்புக்கும் பயிற்சி வழங்க வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகளை, தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டால் மட்டுமே தென்னை விவசாயம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    தேங்காய் விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்துள்ள தென்னை விவசாயிகளுக்கு உரம் விலை கடும் உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருமளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேங்காய்க்கு 7 - 9 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு விலை கிடைக்கிறது. இதனால் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொண்டு, தென்னந்தோப்புகளை பராமரிக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இந்த சூழலில், பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது.இரண்டாண்டுக்கு முன் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பொட்டாஷ் 900 - 950 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் 6 மாதமாக 90 சதவீதம் உயர்ந்து 1,750 ரூபாய் வரை தனியார் உரக்கடைகளில் விற்கப்படுகிறது.வேளாண் துறை சார்பில், வட்டார அளவில் வழங்கப்படும் நுண்ணூட்டங்களின் விலையும், கணிசமாக உயர்ந்து உள்ளது.

    மூன்றாண்டுகளுக்கு முன் வேளாண் துறையினர் சார்பில் கிலோ 55 - 60 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டநுண்ணூட்ட உரங்களின் விலை தற்போது 60 - 90 ரூபாய் என உயர்ந்துள்ளது.

    Next Story
    ×