search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் அரவை குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை
    X

    அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய காட்சி.

    நெல் அரவை குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை

    • உணவு உற்பத்திக்கான பரப்பை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களிடம் கோரியுள்ளது.
    • வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தான் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    காங்கயம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் திருப்பூர் ஈரோடு மாவட்ட தனியார் அரிசி ஆலை அரவை உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் காங்கயம் அரிசி ஆலை சங்கத்தில் நடைபெற்றது‌.

    இதில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், உணவுப்பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிப கழக செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,வரும் பருவத்தில் நெல்லை அரைத்து கொடுப்பது குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ள நெல்லை அரைத்து தருவது குறித்து அரவை ஆலை உரிமையாளர்களுடன் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சார்பில்கூறுகையில்,கொள்முதல் செய்யப்படும் நெல் 16 சதவீதம் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வாறு வரும் நெல்லை அரவை செய்யும்போது ஒரு வேகவைப்பு மூலம் கொடுக்க அமைச்சர் கூறியுள்ளார்.

    ஆனால் அவ்வாறு செய்தால் அரிசி உற்பத்தி அளவு குறைவு ஏற்படும். இதனால் அரசின் அரிசி ஆலைகளில் எந்த அளவு அரிசி உற்பத்தி வருகிறது என கூறினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் நெல் கொள்முதல் செய்யும் போதே ட்ரையர் அமைத்து கொள்முதல் செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும் என கூறினர்.

    மேலும் அரிசிக்கு ஜிஎஸ்டி போடப்பட்டதை தி.மு.க. அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என காங்கயம் தாராபுரம் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் சக்கர பாணி கூறுகையில்,கொள்முதல் குடோனில் சேமிக்கும் போது ட்ரையர் அமைத்து நெல் ஈரப்பதம் 12 அல்லது 13 சதவீதம் இருக்கும் படி செய்து அரவைக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். சன்னரக நெல்லை அதிக அளவில் பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்து பயிரிட வலியுறுத்த உள்ளோம்.

    அரவை ஆலைகளுக்கு நெல் அரைத்து தரும்போது இரண்டு நாட்களில் பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். அரவை கூலி குவிண்டாலுக்கு புழுங்கல் அரிசிக்கு 100ம் பச்சை அரிசிக்கு 60 கொடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்‌. தற்போது 40 ரூபாய் கொடுக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் யாராவது இவ்வாறு வந்து அரவை செய்து கொடுக்க கேட்டுள்ளார்களா? இல்லை. நாங்கள் வருகிறோம் என்றால் மக்கள் நலனுடன் உங்களையும் இணைக்க முயற்சியே இது என்றார்.

    உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், உணவு உற்பத்திக்கான பரப்பை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களிடம் கோரியுள்ளது. அதன்படி உற்பத்தியாகும் நெல்லை அரைத்து கொடுக்க ஆலை அதிபர்கள் ஒத்துழைத்து கொள்முதல் செய்யும் நெல்லை அரைத்து கொடுக்க வேண்டும். அரைத்து கொடுக்கும் நெல்லுக்கு பணம் கிடைக்கவில்லை என்பது கடந்த காலங்களில் நடைபெற்றிருந்தாலும் தற்போது அவ்வாறு நடைபெறாது என்றார்.

    இதன்பின்னர் நிருபர்களிடம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், தற்போது காங்கயம் பகுதி நெல் அரவை ஆலை உரிமையாளர்களிடம் அரசு கொள்முதல் செய்யும் நெல்லை அரைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு முன்கூட்டியே டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதன் முறையாக செப்டம்பர் மாதம் 1 ந்தேதி முதலே நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தான் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே கொள்முதல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்வலி விதைக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு விலை நிர்ணயம் செய்தவுடன் விதைகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய தயாராக உள்ளதாக கூறினார். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.300 கோடி இருந்தது. அது இந்த ஆட்சியில் உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டதின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    Next Story
    ×