search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து செலவுத்தொகை வழங்க  கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து செலவுத்தொகை வழங்க கோரிக்கை

    • மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கல்வித்துறை வாயிலாக குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, குறுமைய போட்டியைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு, குறுமைய போட்டி துவங்கியுள்ளது. மாணவர்களும், ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகமே, மாணவர்களுக்கான சிற்றுண்டி, தண்ணீர், டீ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான உணவு செலவினங்களை ஏற்க வேண்டும். ஆனால் அரசால் அப்பள்ளிக்கான நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்தந்த பள்ளித்தலைமையாசிரியர்களே பொது நிதியில் இருந்து செலவுக்கு அளித்து வருகின்றனர். இதனால் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டால், தலைமையாசிரியர்கள் சொந்த செலவில் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

    நடப்பாண்டு போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அதற்கான தொகையை அரசால் உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல போட்டி நடத்தும் பள்ளி நிர்வாகம், இதற்கான அனைத்து தொகையையும் செலவிட வேண்டும். நிதி விடுவிக்க தாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பயணப்படி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×