என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளரை படத்தில் காணலாம்.
டெங்கு காய்ச்சலை தடுக்க திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மருந்துகள் தெளிக்கும் பணி தீவிரம்
- மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் மருந்து அடிக்கப்பட உள்ளது.
- வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளது. பனியன் தொழிலாளர்கள் அதிக அளவு வசித்து வருவதால், மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பகுதியாக மாநகராட்சி பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைக்காலம் என்பதால் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கவும், கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோல் தண்ணீர் தொட்டிகளில் அபாட் மருந்தும் தெளித்து வருகிறார்கள்.
மேலும் சிரட்டை, டயர்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்கள். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வார்டுக்கு 5 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் என 300 பேர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மருந்துகள் தெளித்து வருகிறார்கள்.
மேலும் திருப்பூர் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு அங்கு தனிமையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






