search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம் - பாளையங்கோட்டையில் அணிவகுத்த  11 அம்மன் சப்பரங்கள்
    X

    பாளையில் இன்று காலை 11 அம்மன் சப்பரங்கள் ராமசாமி கோவில் முன்பு அணி வகுத்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம் - பாளையங்கோட்டையில் அணிவகுத்த 11 அம்மன் சப்பரங்கள்

    • நெல்லையில் தசரா விழாவுக்கு பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி 11 அம்மன் கோவில்களிலும் அம்மன்களுக்கு துர்கா ஹோமமும், யாக சாலை பூஜையும் நடந்தது.

    நெல்லை:

    நெல்லையில் தசரா விழாவுக்கு பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது. பின்னர் விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.

    நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி 11 அம்மன் கோவில்களிலும் அம்மன்களுக்கு துர்கா ஹோமமும், யாக சாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் பவனி வந்தன.

    இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்

    இன்று காலை 8 மணிக்கு 11 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு ராஜகோபாலசாமி கோவில் முன்பு அணிவகுத்தன. இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியில் நிற்கின்றன. இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 11 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.

    இதேபோல் நெல்லை டவுனில் புட்டாபுரத்தி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், முப்பிடாதி அம்மன், வாகையடி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், துர்க்கை அம்மன், தங்கம்மன், மாரியம்மன், சாலியர் தெரு மாரியம்மன் உள்ளிட்ட 36 அம்மன் கோவில்களில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் சப்பரத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.

    தச்சநல்லூர்

    இதேபோல் தச்சநல்லூரில் இன்று இரவு சந்திமறித்தம்மன், தேனீர்குளம் எக்காளதேவி அம்மன், வாலாஜபேட்டை முத்துமாரியம்மன், தளவாய்புரம் துர்க்கை அம்மன், உச்சினிமகாளியம்மன், உலகம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சப்பரங்கள் அணிவகுத்து நாளை மதியம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

    Next Story
    ×