என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோர கடைகள் அகற்றப்பட்ட காட்சி.
திருப்பூரில் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்-பரபரப்பு
- போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு உழவர் சந்தை மற்றும் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிகாலையில் காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கம். இதனால் தினமும் தென்னம்பாளையம் பகுதி பரபரப்பாக காணப்படும்.
இந்தநிலையில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் வெளியே சாலை ஓரங்களில் அதிகப்படியான கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் பல்லடம் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர காய்கறி கடைகளை அகற்றும் பணி நடந்தது.
இதற்கான பணியில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் ,உழவர் சந்தை விவசாயிகள் ,நெடுஞ்சாலை துறையினர் இணைந்து செயல்பட்டனர். சாலையோர கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு தனி இடம் அமைத்து தரவேண்டி ஏற்கனவே பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் தான் நாங்கள் இங்கு கடை அமைத்துள்ளோம். எங்களுக்கு நிரந்தரமாக ஒரு இடத்தை அமைத்து தந்தால் அங்கு கடை வைப்பதாக கூறினர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.






