search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணை முன்பு திரண்ட முகவர்களை படத்தில் காணலாம்.
    X

    திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணை முன்பு திரண்ட முகவர்களை படத்தில் காணலாம்.

    • பால் வினியோகம் பல மணி நேரம் தாமதம்
    • முகவர்கள் காத்திருப்பு-விற்பனை செய்ய முடியாமல் அவதி திருச்சி ஆவின் நிறுவனத்தில் எந்திர கோளாறு என காரணம் கூறப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி ஆவின் நிறுவனம் மூலம் திருச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளி அடைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இது ஆவின் நிறுவன வாகனங்கள் மூலமாக அதிகாலை நேரங்களில் முகவர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. பின்னர் முகவர்கள் கடைகள் மற்றும் வீடுகளுக்கு கூலி ஆட்கள் மூலம் சப்ளை செய்கின்றனர்.இந்த நிலையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவர்களுக்கு ஆவின் பால் மிகவும் தாமதமாக வந்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால் காலை 8 மணிக்கு வந்ததால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் நுகர்வோருக்கு பால் கிடைக்காத காரணத்தால் அவர்களும் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக திருச்சி கண்டோன்மென்ட், தில்லைநகர், வயர்லெஸ் ரோடு, வரகனேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆவின் பால் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் ஆவின் முகவர்களின் பால் தேக்கமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாநகரில் உள்ள முகவர்கள் பால் வருவதற்கு தாமதமானதால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் முகவர் ஆனந்த் கூறும்போது, பால் பண்ணைக்கு மிக அருகாமையில் கொட்டப்பட்டு பகுதி அமைந்துள்ளது. வழக்கமாக அதிகாலை மூன்றரை மணி அளவில் எனக்கு பால் வந்து விடும். ஆனால் இன்று காலை 7.30 மணிக்கு பால் வந்தது. நான் தினமும் 500 லிட்டர் பால் கொள்முதல் செய்கிறேன். தாமதமாக வந்ததால் 300 லிட்டர் பால் கூட சப்ளை செய்ய முடியவில்லை. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பால் தாமதமாக சென்றுள்ளது. காலையிலேயே கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செய்யும் குடும்பத்தினருக்கு பால் சப்ளை செய்ய முடியவில்லை என்றார்.பால் சப்ளை தாமதமானதற்கு பால் பதப்படுத்தும் 2 எந்திரங்கள் நேற்று இரவு திடீரென பழுதடைந்து விட்டது காரணம் என கூறப்படுகிறது. மேலும் தனியார் நிறுவன பால் விலை உயர்ந்துள்ள காரணத்தால் ஆவின் விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பால் டப்பா தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




    Next Story
    ×