search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருளை தடுக்க எம்.எல்.ஏ.க்களும் காவல்துறைக்கு உறுதுணையாக இருப்பார்கள் - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
    X

    போதை பொருளை தடுக்க எம்.எல்.ஏ.க்களும் காவல்துறைக்கு உறுதுணையாக இருப்பார்கள் - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

    • திருச்சி ஒருங்கிணைந்த பஸ் முனைய பணியின் இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்புகளை பதிப்பதற்கு சாலைகளை தோண்டி தான் ஆக வேண்டி இருக்கிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க மாணவிகள் அந்த உறுதியை ஏற்றுக்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளை வைத்து இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை நடத்தி இருக்கிறார். இதில் வழங்கி உள்ள அறிவுரைகளை இங்கு இருக்கக்கூடிய ஐ.ஜி., டி.ஐ.ஜி., கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பின்பற்றுவார்கள்.

    சட்டமன்ற உறுப்பினர்களிடமும் போதைப்பொருளை தடுக்க காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஒவ்வொரு பள்ளிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். போலி லாட்டரி சீட்டு விற்பனையை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி ஒருங்கிணைந்த பஸ் முனைய பணியின் இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்புகளை பதிப்பதற்கு சாலைகளை தோண்டி தான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலைகள் போடும் பணி வேகமாக நடக்கிறது. மழைக்காலங்களில் சாலை போட்டால் தார் ஒட்டாது. பத்து ஆண்டுகளாக சாலையே போடாதவர்களிடம் எதையும் நீங்கள் கேட்கவில்லை. சாலை போடும் எங்களிடம் மட்டும் கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சி நிகழ்ச்சியில் மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், கதிரவன், பழனியாண்டி, அப்துல் சமது, மத்திய மண்ட ஐ.ஜி. சந்தோஷ் குமார், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெய நிர்மலா மற்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

    இந்த உறுதி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற ஐந்து மாணவிகள் லேசான மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு விளையாட்டு மைதானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்கம் தெளிந்தனர். நீண்ட நேரம் வெயிலில் நீண்ட காரணத்தினால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆசிரியை ஒருவரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×