search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு
    X

    ஸ்ரீரங்கத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு

    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
    • தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்தி பெற்ற ெரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை.

    மேலும் வழிநெடுகிலும் சாலைகளில் பஸ்களை நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தீர்க்கப்படாமல் இருக்கும் அடிமனை பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீரங்கம் பஸ் நிலைய பிரச்சினைக்கு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.

    இதையடுத்து தமிழக பட்ஜெட்டிலும் ஸ்ரீரங்கம் புதிய பஸ் நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கிளப் இடத்தை பார்வையிட்டனர்.

    சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் அமைந்துள்ளது. அதில் பஸ் நிலையம் அமைக்க அமைச்சர் கே.என்.நேரு பச்சைக்கொடி காட்டி விட்டதாக மேயர் மு.அன்பழகன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பினை எண்ணி பெருமிதம் கொள்கிறோம்.

    அமைச்சர் தேர்வு செய்துள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திட்ட மதிப்பீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். சுமார் ரூ.25 கோடி அளவுக்கு திட்ட மதிப்பீடு வரும் என எதிர்பார்க்கிறோம். இந்த புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.

    மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை யாத்திரி நிவாஸ் எதிர்ப்புறம் உள்ள கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த திட்டமிட்டு ெரங்கநாதர் கோவில் அறநிலைய துறையிடம் கேட்டிருக்கிறோம். ஏற்கனவே யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக மாநகராட்சிக்கு இடம் தருவதாக அப்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.

    அந்த அடிப்படையில் யாத்திரி நிவாசுக்கு எதிர்ப்புறம் உள்ள நிலத்தை கேட்போம். அதனை அவர்கள் தர ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தரை வாடகைக்கு கேட்டு சுற்றுலா பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்படும். அதன் மூலம் கோவில் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

    ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் கூறும் போது, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, பழனியாண்டி எம்.எல்.ஏ., மேயர் அன்பழகன் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதேபோன்று அடிமனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வினை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்றார். இந்த புதிய பஸ் நிலையம் அமைவதன் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×