search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை திடீர் ரத்து
    X

    திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை திடீர் ரத்து

    • திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை திடீர் ரத்தானது
    • அதிக கட்டணம் செலுத்த முடியாமல் பயணிகள் தவிப்பு

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிண்டோ, ஸ்கூட் விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது.இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மட்டும் பல ஆண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து இலங்கைக்கு பிட்ஸ் ஏர் நிறுவனம் தனது சேவையை துவங்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் இயக்கமானது ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமான சேவையும் குறைந்த காலமே இயக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இரு சேவைகளை வழங்கி வந்தது.

    அதில் குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் என இரு சேவைகளும் இயக்கப்பட்டு வந்தது. இதில் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் இலங்கை வழியாக செல்வது வாடிக்கை. இந்த பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலை இருந்து வந்தது.திருச்சிக்கு வரும் பயணிகள் அதிக அளவில் இந்த விமான சேவையினை பயன்படுத்தி வந்தனர். தென் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்லும் பயணிகள் அதிகம் என்ற காரணத்தினால் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளை பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது.

    இவ்வாறு திருச்சி விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் வளைகுடா நாடுகளுக்கு இருந்தாலும் இலங்கை சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு கட்டணம் குறைவாக இருந்த காரணத்தினாலும் பயண நேரம் குறைவு என்பதாலும் இதனை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.இதற்கிடையே கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது வாரத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கடந்த 6-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இரு சேவைகள் வழங்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தற்போது ஒரு சேவை மட்டும் வழங்கி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் நிலை ஏற்படுகிறது.மேலும் விமான சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் ஒரு விமான சேவையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் தனது இரண்டாவது சேவையை வழங்குவதுடன் ரத்து செய்யப்பட்ட இரண்டு நாட்கள் விமான சேவைகளும் மீண்டும் வழங்கிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் திருச்சி விமான நிலையத்திலிருந்து புதிய விமான நிறுவனங்களின் சேவைகள் இலங்கைக்கு இயக்கப்பட்டால் இது போன்ற சிரமங்கள் பயணிகளுக்கு ஏற்படாது என கூறப்படுகிறது.

    Next Story
    ×