search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி கொள்ளிடம் ஆற்றின் 17-வது இரும்புத்தூண் இடிந்து விழுந்தது
    X

    திருச்சி கொள்ளிடம் ஆற்றின் 17-வது இரும்புத்தூண் இடிந்து விழுந்தது

    • திருச்சி கொள்ளிடம் ஆற்றின் இரும்பு பாலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக 17-வது தூண் இன்று இடிந்து விழுந்தது
    • பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு ரூ.3.10 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க இருந்தது

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவல்-சமயபுரம் டோல்கேட்டை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ல் 12.5 மீ. அகலம், 792 மீ. நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் பயன்பாட்டில் இருந்து வந்த இப்பாலம் வலுவிழந்ததால், இப்பாலத்தில் 2007 முதல் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த சூழலில் இந்த பழைய பாலத்துக்கு மாற்றாக அதனருகிலேயே ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, 14.2.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.

    அதற்குப்பின் அனைத்து வாகனங்களும் புதிய பாலத்தில் சென்று வரத் தொடங்கியதால், பழைய பாலத்தை பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக 2018 ஆகஸ்டு 16-ந்தேதி கொள்ளிடத்தில் பெருக்கெடுத்த பெருவெள்ளத்தில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 18, 19-வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன.

    பழைய பாலத்தை அப்படியே வைத்திருந்தால் காலப்போக்கில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழுந்தால், அருகிலுள்ள புதிய பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விடும். எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு ரூ.3.10 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.

    இந்தநிலையில் இருபதாவது தூண் மணல் அரிப்பு காரணமாக தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கும் நிலையில் உள்ளது. இந்த சூழலில் 17 ஆவது தூண் கடந்த மூன்று தினங்களாக மெல்ல மெல்ல சரிந்து வந்து நிலையில் இன்று காலை 17-வது தூண் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

    பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே நீரின் வேகம் காரணமாக ஒவ்வொரு தூணும் இடிந்து வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கொள்ளிடம் பழைய பாலம் திருச்சியின் பெருமையாக விளங்கி வரும், அதே வேளையில் மண் சரிவால் அருகில் உள்ள புது பாலத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்ற நிலை உள்ளதால் உடனடியாக பழைய அகற்ற வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

    Next Story
    ×