search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அணை நிரம்புவதற்குள் லிங்காபுரம்-காந்தவயல் மேல்மட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    அணை நிரம்புவதற்குள் லிங்காபுரம்-காந்தவயல் மேல்மட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

    • லிங்காபுரம், காந்தவயல், ஆளூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் போது 21 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சி 1-வது வார்டில் லிங்காபுரம், காந்தவயல், உலியூர், காந்தையூர், ஆளூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    லிங்காபுரத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலையில் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியை தாண்டி காந்தவயல், உலியூர், ஆளூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஜூலை மாத இறுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியள்ள நீலகிரி, கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொழியும்.

    இந்த நேரத்தில் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் லிங்காபுரம், காந்தவயல் இடையே தண்ணீர் சூழ்ந்து இப்பகுதியிலுள்ள 21 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படும். இதனால் விளை பொருட்களை எடுத்து செல்வதற்கும், பள்ளி, கல்லூரி , வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவார்கள். இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் கிராமத்தில் பரிசல் மற்றும் மோட்டார் படகு சேவை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும்.

    இதற்கிடையே இப்பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நபார்டு வங்கி உதவியுடன் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் 53 அடி உயரத்தில் 168 மீட்டர் நீளம் , 10 மீட்டர் அகலத்தில் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது கேரளா, நீலகிரி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கான தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலப் பணிகள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். எனவே லிங்காபுரம்-காந்தவயல் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்மட்ட பாலப்பணியை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர் மட்டம் ஆண்டு தோறும் ஜூலை மாத இறுதியில் உயரும். இந்த காலக்கட்டத்தில் லிங்காபுரம்-காந்த வயல் இடையே உள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க கடந்த சில மாதங்களுக்கு முன் மேல்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இப்பகுதியில் தண்ணீர் சூழும் நிலை உள்ளது. எனவே தண்ணீர் வருவதற்குள் இப்பகுதியில் மேல்மட்ட பாலத்திற்கான பணியை விரிவு படுத்த வேண்டும். இல்லையெனில் அனைத்து பணிகளும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இதனால் அரசுக்கும் பல லட்சம் இழப்பீடு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×