என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டு யானைகள் விரட்டியதில் விவசாயி காயம்
    X

    காட்டு யானைகள் விரட்டியதில் விவசாயி காயம்

    • விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்
    • வீடுகளுக்குள் முடங்கிய கிராம மக்கள்

    குடியாத்தம்:

    ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.

    யானைகள் அட்டகாசம்

    யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்றே குறைந்திருந்தது, ஆங்காங்கே ஓரிரு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைசேதப்படுத்தி வந்தது.விவசாயிகள் யானைகள் கூட்டம் குறைந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

    நேற்று அதிகாலை 2 யானைகள் வி.டி.பாளையம் ஊராட்சி கொத்தூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே புகுந்தது.

    இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வெளியில் வர பயந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர். அந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது.

    யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து மாமரங்கள், கேழ்வரகு, நெற் பயிர்களை நாசம் செய்தது இதனால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன.

    இதனையடுத்து விவசாயிகள் ஒன்று திரண்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் விரட்டியதில் விவசாயி சுந்தர்ராஜ் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார்.

    கிராம மக்கள், விவசாயிகள் யானைகளை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அடர்ந்த ஆந்திர காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

    அடிக்கடி இப்பகுதிக்குள் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதால் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் மாலை நேரத்திலேயே கிராம மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.

    யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    குற்றச்சாட்டு

    வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் அக்கறை காட்டுவதில்லை .காலையில் வந்து சேதம் அடைந்த விளைநிலங்களை பார்வையிட்டு சேத விவரங்களை கேட்டு செல்கின்றனர் ஆனால் இரவில் தினம்தோறும் உயிருக்கு அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம் அலட்சியத்துடன் செயல்படும் குடியாத்தம் வனத்துறையினர் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    சைனகுண்டா, பரதராமி, கொட்டாளம் ஆகிய 3 இடங்களில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது.இந்த சோதனை சாவடிகள் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ளது.

    இந்த சோதனை சாவடிகளில் பணியாற்றும் வனத்துறையினர் சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யாமல் பணம் வசூலிப்பது குறியாக உள்ளனர்.அதில் காட்டும் அக்கறை, யானைகளை விரட்டுவதில் காட்டுவதில்லை என குற்றம் சாட்டினர்.

    Next Story
    ×