search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பானை விற்பனை அதிகரிப்பு
    X

    பொங்கல் பானை விற்பனை அதிகரிப்பு

    • ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது
    • காணும் பொங்கல் அன்று நடைபெறும் சந்தைக்கு பதிலாக 14-ந்தேதி நடத்த ஏற்பாடு

    வேலூர்:

    வேலூர் சூளைமேடு பகுதியில் பொங்கல் பானை தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள சில குடும்பத்தினர் மட்டும் தலைமுறை, தலைமுறைகளாக பானை மற்றும் அது சார்ந்த பொருட்களை தயாரித்து உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் சித்தூர், பலமநேர், பாகாலா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக நொடிந்து போயிருந்த பானை தொழில் தற்போது மீண்டும் நல்ல முறையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு மண் பானைகளை அதிகம் வாங்க ஆரம்பித்ததே காரணம் என கூறுப்படுகிறது.

    இது தொடர்பாக சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மண் பானை தொழிலாளி சேகர் கூறும்போது, ''பொங்கல் பானை கடந்தாண்டை விட இந்தாண்டு சற்று விலை உயர்ந்துள்ளது. அரை கிலோ, ஒரு கிலோ பச்சரிசி பொங்கல் வைக்கும் அளவுக்கான பானைகள் அதிகளவில் விற்பனையாகிறது. இந்த வகை பானைகள் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையான பானைகள் நகர்புறங்களில் அதிகமாக விற்பனையாகும்.

    கிராமங்களில் 5 கிலோ அளவு பெரிய பானைகளில் சிலர் பொங்கல் வைப்பார்கள். இதற்காக, குறைந்தளவு பானைகள் தயாராகிறது.

    இந்த பானைகள் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. பொங்கல் பானையுடன் அதற்கான மூடியும் சேர்ந்து விற்பனை செய்யப்படுவது எங்களுக்கு கூடுதல் லாபமாக இருக்கிறது. தினசரி குறைந்தபட்சம் 50 பானைகளாவது விற்று விடுகிறோம்'' என தெரிவித்தார்.

    அதேநேரம், சமையல் தொடர்பான வீடியோக்கள், ரீல்ஸ்களால் சட்டி, பானைகள் விற்பனையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மண் சட்டிகளில் சமையல், பானைகளில் உணவு தயாரிப்பு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதால் தங்களது தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

    ''இப்போதெல்லாம் சட்டி பிரியாணி, தந்தூரி டீ சொப்புகள், மீன் சட்டி தயாரிப்புக்கு அதிக ஆர்டர் வருகிறது. குழந்தைகளுக்கான சிறிய சொப்புகள், உண்டியல்கள் விற்பனையும் இப்போது அதிகரித்து வருகிறது.

    வீடுகளில் அலங்காரத்துக்காக தொங்கவிடும் லவ் பேர்ட்ஸ் தயாரிப்பும் அதிகமாக செய்து வருகிறோம். மக்கள் மனம் மாறியிருப்பதால் எங்கள் தொழில் காப்பாற்றப்பட்டுள்ளது'' என்றார்.

    பொய்கையில் மாட்டு சந்தை

    வேலூர் அடுத்துள்ள பொய்கையில் மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும்.

    வேலூர் மாவட்டத்தின் மிகவும் பிரபலமான மாட்டு சந்தையாக பொய்கை கருதப்படுவதால் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான எருது மாடுகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    அதிகாலை 4 மணியளவில் இருந்தே சந்தை களைகட்டத் தொடங்கி விடும். மேலும், கால்நடைகளுக்கு தேவையான கயிறு, சலங்கைகள் விற்பனையும் காய்கறிகள், ஆடு, கோழி விற்பனையும் இருக்கும்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பொய்கை சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தன. இதனால், வழக்கமான வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பெரிதும் கவலையடைந்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் மாடுகளுக்கான நோய்த்தாக்குதல் காரணமாக விற்பனைக்கான மாடுகள் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

    உள்ளூர் அளவிலும் மாடுகள் விற்பனைக்கு வருவது கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. வேலூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் மாடுகள் வளர்ப்பும் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கூறுகின்றனர். பொய்கை மாட்டு சந்தையில் விற்பனைக்கான மாடுகள் வரத்து குறைவாக இருந்தாலும் நேற்று பிற்பகல் நிலவரப்படி சுமார் ரூ.1 கோடி மதிப்புக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (17- ந் தேதி) காணும் பொங்கல் அன்று சந்தைக்கு பதிலாக வரும் 14-ந்தேதி சந்தை நடத்தவுள்ளனர். பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் சந்தையில் அன்றைய தினம் அதிக மாடுகள் விற்பனையாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.

    Next Story
    ×