என் மலர்
உள்ளூர் செய்திகள்
வெண்ணாற்று பால சாலையை சீரமைக்க வேண்டும்
- கொள்ளிடத்தில் மணல் குவாரி செயல்பட்ட போது மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.
- குண்டும் குழியுமாக பாலத்தில் செல்லும் போது பாலம் மேலும் சிதிலமடைய வாய்ப்புள்ளது.
பூதலூர்:
பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் விண்ண மங்கலம் கிராமத்தின் அருகில் வெண்ணாற்றில் பாலம் ஒன்று உள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, லால்குடி, தஞ்சை, செங்கிப்பட்டி, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களுக்கு பயணிகள் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.
திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையோரத்தில் இருந்து செங்கல்கள் ஏற்றிய லாரிகளும், கொள்ளிடத்தில் மணல் குவாரி செயல்பட்ட போது மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.
குறுகிய பாலமாகவும் பழுதடைந்து உள்ள பாலமாகவும் இருப்பதால் பாலத்தின் இரு புறமும் வலுவிழந்த பாலம் என்ற நெடுஞ்சாலை துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.
பாலத்தின் மேற்பகுதியில் வாகனங்கள் செல்லும் தார்சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழி போல காட்சி தருகிறது.
அதிக பாரத்துடன் குண்டும் குழியுமாக பாலத்தில் செல்லும் போது பாலம் மேலும் சிதிலமடைய வாய்ப்பு உள்ளது.
மழை பெய்தால் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வடைகிறது.
பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் பல்லாங்குழி ஆக காட்சி அளிக்கும் விண்மங்கலம் வெண்ணாற்று பால சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.