search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிட்டாபட்டியில் சினிமா படக்குழுவினரை விரட்டியடித்த கிராம மக்கள்
    X

    அரிட்டாபட்டியில் சினிமா படக்குழுவினரை விரட்டியடித்த கிராம மக்கள்

    • வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
    • சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விரட்டியடிப்பு

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பல்லுயிர் வனக்காப்பக்கமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த மற்றும் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் திரைப்பட குழுவினர் அவ்வப்போது வந்து திரைப்படங்களை சூட்டிங் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட குழுவினர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை பிடித்து வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சிகளை படமாக்கினர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறும், பறவைகள் மற்றும் வன விலங்குகளுக்கும் அச்சம் எழுந்தது.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த குழுவினரை விரட்டினர்.

    இதற்கிடையே தற்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்காது என்று அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதியதாக ஒரு திரைப்படத்திற்கு படப்பிடிப்பு குழுவினர் பெட்ரோல் கேன்கள் போன்ற பொருட்களுடன் பல்லுயிர் வனகாப்பகம் அருகே வந்து முகாமிட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் படப்பிடிப்பு காட்சியை நடத்திக் கொண்டிருந்தனர்.


    அப்போது அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. மேலும் ஜே.சி.பி., கிரேன், கம்ப்ரசர்களை கொண்டு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாறைகளை வெடிவைத்து தகர்த்தாக தெரிகிறது.

    மேலும் அதிக அளவில் மண்எண்ணை, பெட்ரோல் கேன்களும் அங்கு இருந்தன. அந்த படக்குழுவினர் ஜே.சி.பி. எந்திரம், வெடிமருந்து பொருட்கள், கிரேன்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.

    அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்ற உள்ளூர் மக்கள் இது குறித்து அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து படப்பிடிப்பு குழுவினர்களை சிறைபிடித்து சரமாரி கேள்வி கேட்டனர்.

    தாங்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக கூறியதை ஏற்க மறுத்த கிராம மக்கள் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளத்தில் எவ்வாறு வெடிவைத்து தகர்க்கலாம் என கேள்வி எழுப்பி அவர்களை வாகனங்களோடு சிறைப்பிடித்ததனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு திருப்பி அனுப்பி உள்ளனர்.

    டங்ஸ்டன் பிரச்சனையால் பரபரப்பாக இருக்கின்ற சூழலில் அரிட்டாப்பட்டி பகுதியில் சினிமா படப்பிடிப்பு என்று கூறி பல்வேறு வாகனங்களோடு குவிந்தவர்களால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×