search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரனின் தியாகத்தை போற்றும் நடுகல் கண்டெடுப்பு
    X

    வீரனின் தியாகத்தை போற்றும் நடுகல் கண்டெடுப்பு

    • வீரனின் தியாகத்தை போற்றும் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கட்டனூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வா ளர்களான செல்ல பாண்டி யன், ஆய்வாளர்.ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்ட போது பழமையான நடுகல்லை தெப்பக்குளத்திற்குள் கண்டறிந்தனர். இந்த நடுகல் பற்றி அவர்கள் கூறிய தாவது:-

    பொதுவாக நடுகல் எடுக்கும் மரபு நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே பின்பற்றிவருகின்றனர். போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைபவர்களுக்கும், பொதுகாரியம் கருதி உயிர் துறப்பவர்களுக்கும் அவரின் தியாகத்தை போற்றி நடுகல் எடுத்து வழிபடுவர். அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். அதில் வீரன் ஒருவன் தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டையுடனும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் இடைக்கச்சையும் அதில் குறுவாள் சொருகியபடியும் நின்ற கோளத்தில் வணங்கியபடி சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.

    சிற்பத்தின் மேலே கிடைமட்டமாக 14 வரிகளும், மேலிருந்து கீழாக இரண்டு வரிகளும் என 16 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொருள் அறிவதில் சிரமம் உள்ளது. ஆயினும் சில வரிகள் வாசிக்கும்படி உள்ளது. அவற்றில் வெகு தானிய (பகுதானிய) வருடம் என்று தமிழ் வருடங்கள் அறுபதில் 12 வது வருடமாக வரும் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனி மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இவ்வீரன் ஊரின் நன்மை பயக்கும் செயலில் ஈடுபட்டு இறந்திருக்க வேண்டும். அவரின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நடுகல்லை நிறுவி இருக்க வேண்டும். இந்நடுகல்லை தற்போது சீர்காழியை சேர்ந்தவர்களும்,இவ்வூர் பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர் என்றும் இந்நடுகல்லின் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×