search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூறைக்காற்றுடன் பலத்த மழை
    X

    ராஜபாளையத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் பழைய நீதிமன்றம் முன்பு இருந்த ஒரு மரம் முறிந்து சாலையில் விழுந்து கிடக்கும் காட்சி.

    சூறைக்காற்றுடன் பலத்த மழை

    • ராஜபாளையம், சிவகாசியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
    • சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது.

    இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்ேபாது பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலை, காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் விலக்கு, பஞ்சு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ராஜபாளையம் பழைய நீதிமன்ற பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மரங்ள் சாலையில் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களை இயக்கி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    தற்போது அறுவடை முடிந்து பின்னர் அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

    சிவகாசியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது ரிசர்வ்லைன் பகுதியில் இடி விழுந்ததில் பல ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அருகில் இருந்த மின் கம்பங்கள் சேதமடைந்து அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மரங்களை அப்புறப்படுத்தினர்.

    Next Story
    ×