என் மலர்
உள்ளூர் செய்திகள்
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோடு தாமரை நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது24). பெற்றோருடன் வசித்து வருகிறார். ராமகிருஷ்ணா புரம் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பாலாஜி பொருட்களை எடுத்து வைத்து கடையை பூட்டி கொண்டிருந்தார்.
அப்போது அவரது தாயார் செல்போனில் அழைத்தார். பதற்றமாக பேசிய அவர் பாலாஜியை உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு அழைத்து துண்டித்து விட்டார்.
இதனால் வேகமாக கடையை பூட்டிவிட்டு பாலாஜி தனது வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசலுக்கு வந்த போது வீட்டிற்குள் இருந்து குரங்கு குல்லா அணிந்த மர்ம நபர்கள் வேகமாக வெளியே வந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் பாலாஜியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இதில் பாலாஜிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பாலாஜி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டதாகவும், வேறு வழியின்றி 6 ½ பவுன் தாலி செயினை கொடுத்து விட்டதாகவும் அவரது தாயார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.