search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் திடீர் அம்மா உணவகம்
    X

    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் திறந்தவெளியில் செயல்படும் அம்மா உணவகம்.

    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் 'திடீர்' அம்மா உணவகம்

    • விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் ‘திடீர்’ அம்மா உணவகம் செயல்படுகிறது.
    • அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருதுநகர்

    தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. குறைந்த விலையில் இங்கு உணவுகள் விற்கப்பட்டதால் ஏழை-எளிய மக்கள் பயனடைந்தனர்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போதும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.விருதுநகர் நகரில் அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும், ரெயில்வே பீடர் ரோட்டிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் ஏழை-எளிய மக்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் பெண்கள் உள்பட 12 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.2000-க்கும் குறைவாக விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அம்மா உணவகத்தில் நாள்தோறும் குறிப்பிட்ட தொகைக்கு உணவுகள் விற்கப்பட வேண்டும். விற்பனை குறைந்தால் அம்மா உணவகம் மூடப்படும் என நகராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விற்பனையை அதிகரிப்பதற்காக ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார நிலையம் முன்பு ஊழியர்கள் தினமும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சாலையோர கடை போல் இயங்கும் இங்கு பொதுமக்கள், பயணிகள் உணவருந்தி செல்கின்றனர். சாப்பிட்ட பின் இலையை அங்கேயே வீசிவிட்டு நடுரோட்டிலேயே கை கழுவி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தற்காலிக உணவகம் அமைந்துள்ள பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கியுள்ளன. எனவே விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திடீர் அம்மா உணவகத்தை சுகாதாரமான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்கப்பட்டு வருவதால் உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    Next Story
    ×