என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரவிக்கிடக்கும் பண்பாட்டின் அடையாளங்கள்
- விருதுநகரில் பண்பாட்டின் அடையாளங்கள் பரவிக்கிடக்கின்றன.
- இந்த இடங்களுக்கு சென்று நமது பண்பாட்டின் தொன்மை அடையாளங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
விருதுநகர்
நமது மரபு சின்னங்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து, அவற்றை பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் கொண்ட கோவில்கள் உள்ளிட்ட பண்பாட்டின் அடையாளங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் பரவிக்கிடக்கின்றன. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:-
சிவகாசி அருகிலுள்ள பிரபலமான கிராமம் எதிர்கோட்டை. இங்குள்ள கல்வெட்டுகளில் வெண்பைக்குடி நாட்டுக்கூத்தன்குடி என குறிக்கப்பட்டுள்ளது. இங்கு பாற்சுனைக்குடிப் படாரர் என்ற சிவன் கோவிலும், நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோவிலும் உள்ளன. சிவன் கோவிலுக்கு எதிரில் பாறையில் இரு வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன.
இதில் கி.பி.10-ம் நூற்றாண்டு சடையமாறன் கல்வெட்டு, இவ்வூரில் பூசலில் இறந்த கூலிச்சேவகன் மாறம்பட்டனுக்காக, மாகாணக்குடி சேவகன் ஒருவன் இந்த கோவில் இறைவனுக்கு பொன் அளித்துள்ளதையும், கி.பி.965-ம் ஆண்டு சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் கல்வெட்டு, சுனைக்குடி படாரருக்கு, அவ்வூர் அறுவை வாணியச்சேரி ஆச்சன் என்பவர், திருநந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்காக 55 ஆடுகள் அளித்ததையும் கூறுகிறது.
பெருமாள் கோவிலில், முதலாம் ராஜராஜசோழனின் கி.பி.1006-ம் ஆண்டு கல்வெட்டில் கூத்தன்குடி நகரத்தார் இறையிலியாகக் கொடுத்த நிலம் பற்றியும், மற்றொரு கல்வெட்டில் சாலியன் கன்றாடைக்காவிதி என்பவர் பெயரும் காணப்படுகிறது. சாலியர் துணி வணிகர்கள் ஆவர். கோவில் உவச்சுப் பணியாளர்களுக்கு தானம் கொடுத்த ராஜராஜனின் இன்னொரு கல்வெட்டில், திசையாயிரத்து என்ற சொல் காணப்படுவதன் மூலம் இவ்வூரில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிகக்குழு தங்கி வணிகம் செய்திருப்பதை அறிய முடிகிறது.
அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி செல்லும் வழியில் உள்ள தொப்பலாக்கரை. 1000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்பு கொண்ட சிவன் கோவில், பெருமாள் கோவில், விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி ஆகிய தொல்லியல் சின்னங்கள் இங்கு உள்ளன.இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் இவ்வூர் அளற்றுநாட்டு குளத்துார் எனப்படுகிறது. பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோவில் இறைவனை திருமேற்கோயில் உய்யவந்த விண்ணகர எம்பெருமான் என்கின்றன. முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில் இங்கு விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி இருந்ததையும், அதற்கு பள்ளிச்சந்தமாக நிலம் இருந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஆதாரமாக இவ்வூரில் உள்ள இரு சமண தீர்த்தங்கரர் சிற்பங்களை கொள்ளலாம். தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ள இடத்தில் பழமையான ஒரு லிங்கமும் உள்ளது. பெருமாள் கோவில் முன்பு உள்ள பலிபீடத்தில் குலசேகர பாண்டியன் கல்வெட்டும், சிம்மவாகனத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் பாடல் கல்வெட்டும் உள்ளன.
சமூகத்தில் உயர் நிலையில் இருந்து இறந்த அரசர்களுக்கு அமைக்கப்படும் கோவில்கள் பள்ளிப்படை கோவில்கள் என அழைக்கப்படுகி ன்றன. இதன் கருவறையில் லிங்க அமைப்பு காணப்படும். அத்தகைய பள்ளிப்படைக் கோவில்கள் சோழநாட்டில் பல உள்ளன. எனினும் பாண்டிய நாட்டில் திருச்சுழி அருகிலுள்ள பள்ளிமடத்தில் மட்டுமே பள்ளிப்படை கோவில் காணவப்படுகிறது.
குண்டாற்றின் கரையில் உள்ள பள்ளிமடத்தில் இறந்த தன் அண்ணன் சுந்தரபாண்டியனுக்கு ஒரு பள்ளிப்படை கோவிலை சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் உருவாக்கியதை அறிய முடிகிறது. இவர்கள் இருவரும் 3ம் ராஜசிம்ம பாண்டியனின் மகன்கள். கி.பி.10-ம் நூற்றாண்டில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் இடையில் பல போர்கள் நடந்தன. அந்த சமயம் இந்த ஊரில் சுந்தரபாண்டியன் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கல்வெட்டுகளில் பருத்திக்குடி நாட்டு திருச்சுழியல் பள்ளிபடை சுந்தரபாண்டீஸ்வரம் என இந்த கோவில் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய இளைய தலைமுறையினர் இந்த இடங்களுக்கு சென்று நமது பண்பாட்டின் தொன்மை அடையாளங்கள் குறித்தும், அவற்றின் பின்புல வரலாறு குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்