search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையை படத்தில் காணலாம்.

    புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
    • அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், ஆனைமடுவு அணை மற்றும் வசிஷ்டநதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்களும், பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரு நூற்று மலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்ட நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகை யில், 263.86 ஏக்கர் பரப்பள வில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பா ளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பேளூர், குறிச்சி, கொட்ட வாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்கள் நிலத்தடி நீராதாரமும், ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதியும் பெறுகின்றன.

    16 ஆண்டுகளுக்கு பிறகு

    16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் 65.45 அடியில் 248.51 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு, வினாடிக்கு 110 கனஅடி வீதம் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் வசிஷ்டநதியில் உபரிநீராக திறந்து விடப்பட்டது. இதனால் கடந்தாண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, வாய்க்கால் மற்றும் ஆற்றில் திறக்கப்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி, அணையின் நீர்மட்டம் 41 அடியாக குறைந்து போனது. அணையில் 80.73 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது.

    நீர்மட்டம் உயர்ந்தது

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 3 மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணையில் 142 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது வினாடிக்கு, வெறும் 5 கனஅடி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    விவசாயிகள் எதிர்பார்ப்பு

    எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்தால் தான், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், ஆனைமடுவு அணை மற்றும் வசிஷ்டநதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்களும், பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    ஆனைமடுவு அணையின் நீர்மட்டம் 52.53 அடியை எட்டியுள்ளதால், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பெய்யும் பருவ மழையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×