search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாவுக்கரசர், நயினார் நாகேந்திரன் மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவார்களா?
    X

    திருநாவுக்கரசர், நயினார் நாகேந்திரன் மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவார்களா?

    • சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
    • தி.மு.க, அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் பலம் பொருந்திய கட்சிகள்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    அ.தி.மு.க.வில் அதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சி தலைவர்களும் காய் நகர்த்தி வருகிறார்கள். தாங்கள் தற்போது இருக்கும் கட்சிக ளில் சரியான வாய்ப்பு கிடைக்காதவர்களும், ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பவர்களும் மாற்றுக் கட்சிகளில் சேரலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருகிறார்கள்.

    தமிழகத்தைப் பொறுத்த வரையில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே பலம் பொருந்திய கட்சிகளாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த 2 கட்சிகளிலுமே சேருவதற்கு அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    அந்த வகையில் தமிழக பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அ.தி.மு.க. வில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் போய் சேர்ந்த அவருக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லை.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் அவர் இணைந்துள்ளார்.


    திருநாவுக்கரசர்- நயினார் நாகேந்திரன்

    அவரது வழியை பின் பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரன் இருவரும் தாய் கழகமான அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

    பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்க வேண் டியதை பலரும் திட்டமிட்டு தடுத்துவிட்டனர் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். தற்போதும் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியிலேயே இருக்கும் அவர் அ.தி.மு.க.வில் மீண்டும் சேரப் போவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோன்று பா.ஜனதாவில் துணை தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவியை தனக்கு வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தார்.

    நீண்ட நாட்களாகவே அவருக்கு இந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் பா.ஜ.க. தலைமையோ நயினார் நாகேந்திரனுக்கு இதுவரை தலைமை பதவியை வழங்கவில்லை.


    அதே நேரத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த பிறகும் அ.தி.மு.க. தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார். இதன் மூலம் தாய் கட்சியான அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற அவர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுபற்றி நயினார் நாகேந்திரனிடம் கேட்ட போது, கட்சி மாறப் போவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×