search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை வாலிபரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்த பெண் கைது
    X

    கைது செய்யப்பட்ட தீபிகா.

    தஞ்சை வாலிபரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்த பெண் கைது

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். இணையதளம் வழியாகவும் பல்வேறு வேலை விவரங்களை தேடிக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது.

    அதில் நீங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வெளிநாட்டில் உள்ளது.

    உங்களுக்கு அந்த வேலை வேண்டுமென்றால் நான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும்.

    உங்களுக்கு விசா தயார் செய்து வெளிநாட்டிற்கு வேலை அனுப்புவது வேண்டியது எனது பொறுப்பு என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என்று நம்பி அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை செலுத்தி இருந்தார்.

    ஆனால் நாட்கள் கடந்தும் வெளிநாட்டிற்கான வேலை பணி நியமன ஆணை வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

    ஆனால் எந்த தகவலும் தெரியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார்.

    இது குறித்த அவர் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட செல்போன் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    அதில் திருப்பூரை சேர்ந்த தீபிகா (வயது 30) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தீபிகாவை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வாலிபரிடம் வெளிநாட்டு வேலை எனக்கூறி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

    போலீசாரிடம், தீபிகா கூறிய விவரங்கள் வருமாறு:-

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன்.

    பின்னர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்னை குன்றத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வந்தேன். எனக்கு பணம் அதிக அளவில் தேவைப்பட்டது .

    அப்போது யாருக்காவது போன் செய்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தேன்.

    அதன்படி சம்பந்தப்பட்ட வாலிபருக்கு குறுந்தகவல் அனுப்பி எனது பெயரை மாற்றி கூறினேன். அவர் நம்பும் அளவிற்கு குறுந் தகவல்கள் அனுப்பினேன்.

    மேலும் வேறு ஒருவரின் வங்கி கணக்கை கொடுத்து அதில் பணம் போடச் செய்தேன். மேலும் வேறு பெயரில் உள்ள சிம் கார்டுகளை பயன்படுத்தினேன்.

    இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி நான் வேலை பார்த்த இடத்தில் என்னுடன் பணி புரிந்து வந்த ஒருவரை தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் இணையதளம் மோசடி செய்ததாக கூறி கைது செய்தனர்.

    அதுபோல் நானும் மாட்டிக்கொள்வேன் என்ற பயத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினேன். ஆனால் எப்படியோ என்னை தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து தீபிகாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஐ போன், செல்போன், பல்வேறு சிம் கார்டுகள், பான் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து தீபிகாவை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரிக்க நீதிபதி , தீபிகாவை வருகிற 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார், தீபிகாவை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

    கவனமுடன் இருக்க வேண்டும்

    ஏதாவது ஒரு நம்பரில் இருந்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.

    நீங்கள் பணம் அனுப்பினால் நாங்கள் அந்த பரிசுத்தொகையை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம் என குறுந்தகவல் வரும்.

    அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் உங்களது செல்போன் எண்ணுக்கு பணம் கிடைத்துள்ளது. முன்பனமாக சிறிய தொகை செலுத்தினால் நாங்கள் பெரிய அளவில் பணம் தருகிறோம் எனவும் மெசேஜ் வரும்.

    அதனையும் நம்பி ஏமாற வேண்டாம். வங்கி விவரங்கள், ஓ.டி.பி விவரங்களை யாரும் கேட்டால் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து இது போன்ற தகவல்கள் கேட்பதில்லை. சமூக வலைத்தளங்களை கவனமுடன் கையாள வேண்டும்.

    வெளிநாட்டில் வேலை என கூறி பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உண்மைத்தன்மை ஆராய்ந்து அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.

    Next Story
    ×