search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரிக்குடி அருகே அதிகாலையிலேயே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் விழா
    X

    நரிக்குடி அருகே அதிகாலையிலேயே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் விழா

    • ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.
    • முன்னதாக பக்தர்கள் மனமுருகி வேண்டி மாசாணம் சுவாமியை தரிசனம் செய்து திருவருள் பெற்று சென்றனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக மிகவும் பிரசித்தி பெற்ற. மாசாணம் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் வைகாசி வளர்பிறையில் மறையூர் மாசாணம் சுவாமி கோவில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    கிருதுமால் ஆற்றங்கரையில் அமைந்து அருள் பாலிக்கும் மாசாணம் சுவாமி கோவில் ஆலயத்தில் பூஜை நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் கோவிலில் நள்ளிரவில் நடைபெறும் கப்பரை பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாசாணம் சுவாமியை நினைத்து மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ளவும், தரிசனம் செய்யவும் பெண்களுக்கு அனுமதியில்லை. மறையூர் மந்தையம்மன் கோவிலில் புறப்பட்ட மாசாணம் சுவாமி, அரியசாமி மற்றும் வீரபத்திர சுவாமி பூசாரிகள் மாசாணம் சுவாமி கோவிலை வந்தடைவர். அங்கு சுவாமியின் உத்தரவை பெற்ற பின்பு அங்குள்ள அம்மி கல்லில் மஞ்சளை வைத்து சத்தம் எழுப்பும் வகையில் அதனை தட்டி கலயத்தில் வைத்து சுவாமி உத்தரவிற்கு பிறகு பீடமாக காட்சியளிக்கும் மாசாணம் கோவில் ஆலயத்தை வந்தடைவர். அதன் பின்னர் சுவாமிக்கு பொங்கல் வைத்து பல்வேறு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், சேவல்கள் மற்றும் கோழிகளை பலியிட்டு உணவாக சமைக்கப்பட்டு இன்று அதிகாலை முதல் கோவில் வளாகத்தில் மாபெரும் கறிவிருந்து அன்னதானம் நடைபெற்றது.

    இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியானது காலை 5 மணிக்கு தொடங்கி சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவடைவது மிகவும் சிறப்பு. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

    அதுமட்டுமின்றி அன்னதானம் முடிந்து மீதமுள்ள சாதம், எஞ்சிய கறி எதையும் கோவில் எல்லையை அடுத்து எடுத்து செல்ல அனுமதியில்லை.இந்த நிலையில் மீதமிருந்த உணவுகளை பெரிய பள்ளத்தில் போட்டு புதைக்கும் நிகழ்ச்சி வினோதமானது.

    இந்த திருவிழாவில் சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வசித்து வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பசியாறினர்.

    முன்னதாக பக்தர்கள் மனமுருகி வேண்டி மாசாணம் சுவாமியை தரிசனம் செய்து திருவருள் பெற்று சென்றனர்.

    Next Story
    ×