என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காரில் இருந்த கைப்பையை திருடிய வாலிபர் கைது
    X

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காரில் இருந்த கைப்பையை திருடிய வாலிபர் கைது

    • போலீசார் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி ஒரு வாலிபரை பிடித்தனர்.
    • மேலப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜசெல்வம்(வயது 24) என்பதும், கைப்பையை திருடியது அவர் தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    பாளை என்.ஜி.ஓ. ஏ காலனியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி டவுனில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று பஸ்சில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

    கைப்பை திருட்டு

    அவரை அழைத்து செல்வதற்காக சங்கர் தனது காரில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். காரை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக நடைமேடைக்கு சென்றுள்ளார்.

    சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில் ரூ.3,500 ரொக்கபணம், ஏ.டி.எம். அட்டைகள், விலை உயர்ந்த வாட்ச் உள்ளிட்டவை இருந்தது.

    வாலிபர் கைது

    இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி ஒரு வாலிபரை பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மேலப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜசெல்வம்(வயது 24) என்பதும், கைப்பையை திருடியது அவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கைப்பையை மீட்டனர்.

    Next Story
    ×