search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் இளைஞர்கள் `பைக் ரேஸ்- வனத்துறை எச்சரிக்கை
    X

    மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் இளைஞர்கள் `பைக் ரேஸ்'- வனத்துறை எச்சரிக்கை

    • அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு.
    • வனவிலங்குகள் ஆத்திரமடைந்து வாகனஓட்டிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள யானைகள், மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையை கடந்து வனப்பகுதியின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன.

    நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

    இந்த நிலையில் அந்த சாலைகளில் இரவு நேரங்களில் கோத்தகிரி வியூ பாயிண்ட் செல்வதாக கூறி ஒருசில இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

    மேலும் ரேஸ் செல்லும் மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.


    இதன்காரணமாக வனவிலங்குகள் ஆத்திரமடைந்து வாகனஓட்டிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே மேட்டுப்பாளை யம்-கோத்தகிரி சாலையில் வனத்துறையினரும், போலீ சாரும் இணைந்து வாகன சோதனை நடத்துவதுடன் ரோந்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினரும், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசாரும் இணைந்து மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் இரண்டு-நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் வாகனங்களில் அதிவேக மாக உலா வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் கூறுகையில், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு, கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்.

    மேலும் வனவிலங்குகளை கண்டால் கூட்டாகவோ, தனியாகவோ சேர்ந்து விரட்ட முயற்சிக்கக் கூடாது. வன விலங்குகளை ஆத்திர மூட்டும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

    மேலும் சாகச நோக்கத்துடன் ஊர்வலமாக வந்திருந்த பல்வேறு வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.

    Next Story
    ×