search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    சிவாஜி...ஒரு தலைமுறையின் கலைஞன்
    X

    நடிகர் சிவாஜி 

    சிவாஜி...ஒரு தலைமுறையின் கலைஞன்

    • முதல் படத்திலேயே தமிழகத்தையே தன் வசப்படுத்தியவர் அவர் மட்டும்தான்.
    • முதல் மரியாதையில் அவரது இயல்பான நடிப்பு இப்போது பார்த்தாலும் ஆச்சரியத்தைத் தருகிறது.

    சிவாஜி மகா கலைஞன். நடிப்பிற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மேடை நாடகமெனும் விருட்சத்திலிருந்து சினிமாவில் விழுந்த கனி. சிவாஜியின் திரை வாழ்வு நான்கு பரிமாணங்கள் கொண்டது. சிவபெருமானுக்கும், அப்பருக்கும் கூட உருவம் தந்து இருபதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த சைவ - தமிழ் எழுச்சி மரபிற்கு அடையாளமாக இருந்தார்.

    அதே தருணத்தில் கலைஞரின் வசனங்களைத் தொடர்ந்து பேசி தமிழ் கலாச்சார மீட்டுருவாக்கத்தின் முகமாக இருந்தார். கட்டபொம்மன், வ.உ.சி போன்ற பல ஆளுமைகளை தன் நடிப்பால் உணர வைத்து இந்திய தேசியத்தின் தமிழ் முகமாகவும் இருந்தார். இப்படி வெவ்வேறு பரிமாணங்களில் இங்கு உருவாகி வந்த பல்வேறு கலாச்சார மீட்டுருவாக்க அலைகளின் வெகுஜன முகமாக அவர்தான் இருந்தார்.


    பீம்சிங், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் உருவாக்கிய தமிழ் நிலத்தின் கூட்டுக் குடுப்பக் கலாச்சாரப் பிரதிநிதியாகவும் , பல்வேறு இயக்குநர்கள் உருவாக்கிய பெண்களைக் கவர்கிற அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காதலனாகவும் திகழ்ந்தார். ராஜபார்ட் ரங்கதுரை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களின் வழியாக கலைஞர்களின் உடல் மொழிகளை அச்சு அசல் அப்படியே பிரதியெடுத்து அந்த அனுபவத்தைத் திரையில் கடத்தினார்.

    ஈகோவும், பாசமும் ஒருங்கே நிரம்பிய மேல்தட்டு மனிதர்களின் விசித்திரமான குணச்சித்திரத்தை திரையில் (கௌரவம், பார் மகளே பார் ) அற்புதமாகப் பிரதிபலித்தார் அவருடைய சோதனைக்காலம் எழுபதுகளின் பின்பகுதியில் தொடங்கி தொண்ணூறுகள் வரை தொடர்ந்தது.

    ராதா, அம்பிகாவையெல்லாம் தொந்தியோடு அணைத்தபடி அவர் ஆடிய ஆட்டம் உண்மையில் நமக்கான சோதனைக் காலம்.. ஆனால் அவருடைய மிக முக்கியமான இரு படங்களும் இந்தக் காலகட்டத்தில்தான் வந்தன. மிகை நடிப்பு என்று அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் மட்டுமே காரணமில்லை.அவரால் எந்த விதமான பாவத்திலும் நடிக்க முடியும். ஆனால் அவர் காலகட்டத்தில் திரையுலகின் சூழல் அதுதான்.

    முதல் மரியாதையில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு இப்போது பார்த்தாலும் ஆச்சர்யத்தைத் தருகிறது. கத்தி மேல் நடக்கிற மாதிரியான பாத்திரப் படைப்பு அவருடையது. 'ப்பூ' வென்று ஊதித் தள்ளியிருப்பார். தேவர் மகனில் இடைவேளை வரை மிகச் சிறந்த நடிகரான கமலை கவனிக்கவே விடாமல் அவரே என் கண்களை ஆக்ரமித்திருந்தார். அந்த அளவுக்கு பெரிய தேவராகவே வாழ்ந்திருப்பார்.


    கமலுக்கு வாய்த்த இயக்குநர்களும், சூழலும் , காலகட்டமும் அவருக்கு வாய்க்கவில்லை. ஒருவேளை வாய்த்திருந்தால் தமிழில் உருவான சர்வதேசக் கலைஞனாக அவர் மலர்ந்திருக்க முடியும். தான் நடித்த பல படங்களின் காட்சிகளை நண்பர்களிடம் வேறொரு பாணியில் வெகு இயல்பாக நடித்துக் காட்டியிருக்கிறார். கமல் சொன்னதுதான் உண்மை 'ஒரு சிங்கத்துக்கு சைவச் சாப்பாடு போட்டுக் கொன்று விட்டோம். தமிழில் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிற எந்த நடிகரும் முதல் படத்திலேயே மக்களின் மனங்களை வென்றவர்களில்லை.

    எம்.ஜி.ஆர், ஜெமினி, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று அத்தனை பேருமே மெல்ல மெல்ல வளர்ந்து மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்கள்தாம். ஆனால் ஒரே விதிவிலக்கு சிவாஜி மட்டும்தான்‌. முதல் படத்திலேயே தமிழகத்தையே தன் வசப்படுத்தியவர் அவர் மட்டும்தான். அவரை பிரான்ஸ்காரன் மிகச்சரியாக அடையாளம் கண்டிருக்கிறான். தேசிய விருது வழங்கும் கமிட்டிக்கு அடையாளம் தெரியவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.

    அவர் தோற்ற ஒரே இடம் அரசியல்தான். குடும்ப வாழ்க்கை உட்பட மற்ற அனைத்திலும் அவர் வெற்றிகரமான மனிதர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை இழந்த பிறகும் கூட திரையுலகிலும், சமூகத்திலும் அவர் மிகப் பெரிய சக்கர்வர்த்திக்கான தோரணையோடுதான் வலம் வந்தார். அந்த கம்பீரம் குறையவே இல்லை.அதுமாதிரியான மரியாதை இனி ஒருவருக்கு வாய்க்காது.

    என் அம்மா, சித்திகள், என்று எல்லோரும் அவருடைய ரசிகைகள். என் வயதில் இருக்கிற எல்லோருடைய அம்மாக்களின் நினைவிலிருந்து சிவாஜியைப் பிரிப்பது சுலபமில்லை. சிவாஜி வெறுமனே படங்களின் கதாநாயகன் இல்லை. தமிழர்களின் பெருமிதம். ஒரு தலைமுறையின் கலைஞன். அவருடைய புகழ் நிலைத்து நிற்கட்டும்.‌

    -மானசீகன்

    Next Story
    ×