என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
மொழியை பறிகொடுக்கும் இனம்
- புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள்.
- புலி வாழ்கின்ற தமிழ் நிலத்தில் இன்றும் புலி இருக்கிறது. ஆனால் புலி என்ற சொல் மட்டும் தேய்கிறது.
ஆங்கில வழி கல்வியின் தாக்கம் நம் குழந்தைகளின் தாய்மொழித் திறனை வெகுவாகப் பாதித்திருக்கிறது. யானையையும் புலியையும் இன்றைய குழந்தைகளுக்கு 'எலிஃபண்ட், டைகர்' என்கிற இரு சொற்களைக் கொண்டுதான் அடையாளம் தெரிகிறது என்பார் தியடோர் பாஸ்கரன்.
யானையோ புலியோ இல்லாத ஒரு நாட்டின் மொழியே ஆங்கிலம், ஆனால் இம்மொழி யானையும் புலியும் வாழும் தமிழ்நிலத்தைச் சார்ந்த குழந்தைகளின் தாய்மொழியை சிதைத்திருப்பது கொடும் நிகழ்வு.
தமிழ் மொழியில் புலியைக் குறிக்க, புலி, வேங்கை, உழுவை, மறுவ, வயமா, வயப்புலி, கடுவாய், வாள்வரி, வெல்லுமா, பாய்மா, வியாக்கிரம், வல்லியம், தரக்கு, குயவரி, கொடுவரி, புல் என பல சொற்கள் உள்ளன.
புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள். புல் என்பது புல்லி ஆகமாறிப் புலியாகத் திரிந்தது. இதற்கு நேரடிப் பொருள் முன் கால்களால் தழுவும் விலங்கு. இது நடத்தைப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் சூட்டப்பட்டிருக்கும் பெயர்.
ஆங்கிலத்தில் பயிலும் டைகர் என்கிற சொல்லோ பாபிலோனிய ஆறான டைகிரிஸ் எனும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது ஒரு ஐரோப்பியர் முதன்முதலில் அங்குதான் அவ்விலங்கை பார்த்திருக்கிறார். ஆனால் புலி வாழ்கின்ற தமிழ் நிலத்தில் இன்றும் புலி இருக்கிறது. ஆனால் புலி என்ற சொல் மட்டும் தேய்கிறது.
ஆங்கிலச் சொல்லான 'எலிபண்ட் ' என்கிற சொல் பழைய பிரெஞ்ச் மொழியிலிருந்து பிறந்ததா அல்லது இலத்தின், கிரேக்க மொழியிலிருந்து பிறந்ததா என இன்னும் ஆய்வில் இருக்கிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால் தமிழில் இதற்கு யானை, எறும்பி, தும்பி, தூங்கல், தோல், கறையடி, பொங்கடி, உம்பல், வாரணம், ஒருத்தல், வல்விலங்கு, நாகம், கும்பி, நால்வாய், குஞ்சரம், அத்தி, வேழம், உவா, கரி, களிறு, பிடி, கைம்மா, மறமலி, கைம்மா, ஆம்பல், கோட்டுமா, கடிவை, புகர்முகம், பகடு, கரிணி, களபம், மருண்மா, தந்தி, வழுவை, கயம், மதகயம், இபம், கும்பி, பூட்கை, புழைக்கை, மதமா, மந்தமா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. பிறமொழி கலந்த சொற்கள் என்றால் ஐம்பதுக்கு மேல் தேறும்.
இவையனைத்தும் யானையின் உருவமைப்பு, நடத்தைப் பண்புகளின் அடிப்படையில் சூட்டப்பட்டப் பெயர்கள். நிகண்டுகளில் யானையின் உடலில் 25 பாகங்களுக்கு மேல் தனிப்பெயர்கள் காணப்படுகின்றன என்கிறார் பி எல்.சாமி.
ஒரு மொழியில் ஒரு சொல்லின் தோற்றமானது அந்நிலத்தோடும் அதன் பல்லுயிர்ச்செறிவோடும் தொடர்புடையது.
இவ்வாறாகத்தான் பல்லுயிரியச் செறிவு மிக்கப் பகுதியில் வாழ்ந்த நாம் இத்தன்மையைத் நம் மொழியிலும் ஏற்றி வைத்தோம்.
ஆனால் ஓர் உயிரினத்தைக் குறிக்கப் பல சொற்களைக் கொண்ட ஒரு மொழியை, அவ்வுயிரினம் குறித்த சொல் ஏதுமற்ற ஒரு வேற்று மொழி வீழ்த்தி வருகிறது. மற்ற சொற்களுக்கும் இது பரவினால் எதிர்காலத்தில் அது மொழியை ஒழித்த பண்பாட்டு மேலாதிக்கமாக மாறிவிடாதா?
- நக்கீரன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்