search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஆடி அமாவாசை எப்போது?
    X

    ஆடி அமாவாசை எப்போது?

    • ஒரே மாதத்தில் ஒரு பௌர்ணமியோ ஒரு அமாவாசையோ மட்டுமே வர வேண்டும். இதுவே நியதியாகும்.
    • மாதத்தின் துவக்கத்தில் வரும் அமாவாசையோ பெளர்ணமியோ அதிக திதி எனப்படும்.

    இவ்வாண்டு ஆடி அமாவாசையானது ஆடி மாதம் 1ம் தேதியிலும் 31-ஆம் தேதியிலும் வருகின்றது. பொதுவாக ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ பௌர்ணமியோ வந்தால் அது மலமாதம் எனப்படுகின்றது. பொதுவாக மலமாதத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. மலம் என்றால் அழுக்கு, கழிவு என பொருள்படும். ஒதுக்கப்பட வேண்டியது எனவும் தவறானது எனவும் கூட பொருள் படும்.

    அதாவது ஒரே மாதத்தில் ஒரு பௌர்ணமியோ ஒரு அமாவாசையோ மட்டுமே வர வேண்டும். இதுவே நியதியாகும். மாறாக இரு முறை வந்தால் அது மலமாதம் எனப்படுகின்றது.

    மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு. தமிழ் மாதத்தில் 31 அல்லது 32 நாட்கள் வரக்கூடிய மாதத்தில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உண்டு.

    மாதத்தின் துவக்கத்தில் வரும் அமாவாசையோ பெளர்ணமியோ அதிக திதி எனப்படும். அதாவது சந்திரன் கணக்குப்படி இது அமாவாசையோ பௌர்ணமியோ ஆகும். ஆனால் சூரியனின் சஞ்சாரத்தின் கணக்குப்படி அதாவது தமிழ் மாதப்படி அது அமாவாசையா பௌர்ணமியோ ஆகாது.

    தெளிவாக சொல்ல வேண்டுமானால் இவ்வாண்டு ஆடி மாதத்தை எடுத்துக் கொண்டோமேயானால் சூரியன் கடக ராசியில் பிற்பகல் 12.40 மணியளவில் தான் நுழைகின்றார். அதாவது ஆடி மாதம் பிற்பகல் தான் உதயமாகிறது. ஆனால் அமாவாசையோ முதல் நாள் இரவே வந்து விடுகின்றது. அதன் காரணமாகவே இது அதிக திதி எனப்படுகின்றது இது பஞ்சாங்கத்தில் சாந்திரமான அமாவாசை திதி என்றும் ஸெளரமான அதிக திதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    அதாவது சந்திரனின் கணக்குப்படி அமாவாசை திதி என்றும் சூரியனின் கணக்குப்படி பார்த்தால் இது அதிக திதி என்றும் பொருள் படும். ஏனென்றால் 29.5 நாட்களுக்கு ஒரு முறை அமாவாசை திதி நிகழும் என்பது நியதி. இது அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மட்டும்தான் பொருந்துமா என்றால் அப்படி இல்லை, எல்லா திதிகளுக்கும் பொருந்தும்.

    எனவே இவ்வாண்டு ஆடி அமாவாசை என்பது ஆடி 31 (16-08-2023)ம் தேதி அன்று தான் நிகழவிருக்கின்றது. முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை சிறப்பு தர்ப்பணம் செய்ய விரும்புவர்கள் இந்த தேதியில் தான் செய்ய வேண்டும்.

    சரி, ஆடி முதலாம் தேதி வரக்கூடிய அமாவாசையில் விரதம் இருக்கலாமா? கூடாதா? என்ற ஐயம் சிலருக்கு எழக்கூடும். விரதம் இருக்க நினைப்பவர்கள் தாராளமாக விரதம் இருக்கலாம். அது ஒன்றும் தவறானது அல்ல. வழக்கமாக அமாவாசை தோறும் விரதம் இருப்பவர்களும் முதல் அமாவாசையில் விரதம் இருக்கலாம்.

    ஜோதிட கலாமணி கே. ராதா கிருஷ்ணன்.

    எட்டயபுரம்.

    Next Story
    ×