search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    செஸ் விளையாட்டின் வரலாறு...
    X

    செஸ் விளையாட்டின் வரலாறு...

    • பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் “மலைகள்” என அழைக்கப்படுகின்றன.
    • வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.

    சங்க இலக்கியங்களில் தற்போது செஸ் என்றழைக்கப்படும் விளையாட்டுக்கு மூலமான வல்லாட்டம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் காணப்படுவதாலும் கீழடி அகழாய்வில் ஆட்டக்காய்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும் இது கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே விளையாடப்படும் விளையாட்டு என்பது உறுதியாகிறது. பரிபாடலில் இவ்விளையாட்டை வல்லுப்போர் எனப்போருடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளதால் இது சதுரங்க விளையாட்டை ஒத்த விளையாட்டாகவும் கருதப்படுகிறது.

    கி.பி.18ஆம் நூற்றாண்டு உடைய நூலான குற்றாலக் குறவஞ்சியில் வல்லாட்டக் குறிப்புகள் வருவதால் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலும் வல்லாட்டம் தமிழர்களால் விளையாடப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.

    வல்லாட்டம் போர்முறை விளையாட்டு என்பதால் இது தமிழர் சமுகத்தில் காய்கள் நகர்த்தி விளையாடும் விளையாட்டுகளின் பரிணாம வளர்ச்சியாகவே சங்கக்காலத்தில் விளங்கியுள்ளது.

    காடுகளில் வேட்டைச் சமூகமாக வாழும் காலத்தில் விரட்டுதல், தாண்டுதல் பயிற்சிக்காகப் பழங்காலத்தில் விளையாடிய எட்டுக்கோடு விளையாட்டாகவும் பின்னர் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த காலத்தில் விளையாடிய ஆடு புலி ஆட்டம் ஆகவும் மன்னர் ஆட்சிக்காலத்தில் வல்லாட்டமாகவும் பிற்காலத்தில் இது சதுரங்கம் ஆகவும் பரிணமித்து உள்ளது.

    " மூன்று புலிகளும் இருபத்தியொரு ஆடுகளும் கொண்ட ஆடு புலி ஆட்டம் கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து பிறந்த ஆட்டமாக இருக்க வேண்டும். புலி திரியும் காடுகளில் ஆடுகளைக் காப்பாற்ற முற்பட்டவனின் முயற்சி இது.

    அரசு இயந்திரம் மிகப்பெரிய வளர்ச்சியினைப் பெற்ற பிறகு பிறந்த மற்றொரு ஆட்டம் சதுரங்கம். அரசன், மதகுரு, குதிரை வீரன், யானை எனப் போர்ப் பயிற்சிக்கான விளையாட்டாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு மன்னர்களும் இதனை ஆடியிருக்கிறார்கள்.

    'ராஜாக்கள் ஆனைக்கொப்பு ஆடுவாரைப்போல' என்கிறது திருவாய்மொழியின் நம்பிள்ளை ஈட்டு உரை. சதுரங்கம் என்பதனை ஆனைக்கொப்பு என்ற சொல்லால் அக்காலத் தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. "- பேராசிரியர் தொ. பரமசிவன்.

    வல்யானை அல்லது வல்விலங்கு என்பது சங்க இலக்கியங்களில் போர் யானைகளைக் குறிக்கும் சொல்லாகும். வல்லாட்டம் பழங்காலத்தில் வல்யானைப் போர் என்று யானைப் போராக பழங்குடியினரிடையே தோன்றியதென்பதால், பாதுகாப்பான கட்டங்கள் "மலை" என்று குறிப்பிடப்படுவதோடு "வெட்டு" போன்ற சொற்களையும் கொண்டுள்ளது. யானையடி என்ற சொல் யானையின் நேரான நகர்வினைக் குறிக்கும். யானைகுப்பு என்ற விளையாட்டைக் குறிக்கும் சொல் யானை இளவரசர் என்று பொருள் தருகிறது.

    பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் "மலைகள்" என அழைக்கப்படுகின்றன. இவற்றால் வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.

    " குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

    உண்டாகச் செய்வான் வினை."

    எனும் குறளுக்குத் தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது குன்றின் மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பது போல் மிகவும் பாதுகாப்பானது எனப் பொருள். இந்தக் குறளில் யானைப் போர் மற்றும் பாதுகாப்பான மலை ஆகிய பலகை விளையாட்டு குறியீடுகளைக் காணலாம். இந்த மலைக் கட்டங்களே சதுரங்கத்தின் கருப்புக் கட்டங்களாகப் பின்னர் மாற்றமடைந்துள்ளன.

    வல்லாட்டமானது யானைப்போராகவும் யானை விளையாட்டாகவும் தமிழகத்தில் உருவாகி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் யானை விளையாட்டு என்றே பரவியுள்ளது. சீன நாட்டின் சதுரங்கமும் யானை விளையாட்டு என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக இவ்விளையாட்டு ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.

    வல்லாட்டத்தில் சங்கக்கால ஆட்சி முறையான எட்டு முக்கியத் தலைமை கொண்ட எண்பேராயம் எனும் முறையில் காய்களும் அதற்கான கட்டங்களும் அமைந்துள்ளன.

    தமிழ்நாட்டு மன்னர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தவர்களை எண்பேராயம் என்று பகுத்துக் காட்டுவது சங்கக்கால வழக்கம். இவர்களை முறையே...

    செயலாளர்

    காவல்

    ஊர் தலைவர்

    படைத்தலைவர்

    தொண்டர் படை

    யானை படை

    குதிரை படை

    உழவர் படை

    என உணர்ந்து கொள்ளலாம். இந்த எண்பேராயத்தின் வெளிப்பாடாகவே வல்லாட்டத்தில் எட்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    வல்லாட்ட விளையாட்டில் தொடக்கக் காலத்தில் இராணி என்ற காயே கிடையாது. ஏறக்குறைய 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு படைத்தலைவரின் காய் மேற்கத்திய நாடுகளின் சதுரங்க விளையாட்டு ஒழுங்குபடுத்தலில் இராணிக் காயாக மாற்றி விளையாடப்பட்டது.

    - கோடி

    Next Story
    ×