search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    வியாபார மூளை!
    X

    வியாபார மூளை!

    • டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது.
    • காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    1950... இரண்டாம் உலகபோர் முடிந்து ஜப்பான் மறுசீரமைக்கபட்டது. பொருளாதாரம் முன்னேறி வந்தது. நெஸ்லே கம்பனி ஜப்பானில் காபி விற்பனை செய்யலாம் என முனைந்தது. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. ஜப்பானியர்கள் க்ரீன் டீ பிரியர்கள். நாள் முழுக்க ஏராளமான க்ரீன் டீ குடிப்பார்களே ஒழிய காபி குடிக்க மாட்டார்கள்.

    ஜப்பானியர்களுக்கு காபி குடிக்க கொடுத்து சோதனை செய்தார்கள். காபி குடித்த ஜப்பானியர்கள் "ஆகா, அருமை, அற்புதம்" என்றார்கள். அதன்பின் நெஸ்கபே ஜப்பானில் ஆரவாரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஏராளமான பொருள்செலவில் விளம்பரம், கடைகளில் ஸ்டாக் எல்லாம் செய்தும் விற்பனை சுத்தமாக இல்லை.

    காபியை குடிக்க சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கு என்கிறார்கள். ஆனால் அதன்பின் பழைய வழக்கமான க்ரீன் டீக்கு போய்விடுகிறார்கள். காபியை குடிப்பது இல்லை. இவர்களை என்ன செய்வது?

    பிரபல மனிதவியல் நிபுணர், மனநல நிபுணர் க்லோடேர் ராபில்லியை அழைத்து வந்து ஐடியா கேட்டார்கள்.

    "இப்ப அமெரிக்காவில் எல்லாரும் காபி குடிக்கிறீர்கள். திடீர்னு க்ரீன் டீக்கு மாற சொன்னால் மாறுவீர்களா?"

    "அது எப்படி மாறுவோம்?"

    "அந்த மாதிரிதான். க்ரீன் டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையை குறிவைத்தால், அவர்களை காபிக்கு பழக்கபடுத்தலாம். அதற்கு ஒரு பத்து ஆண்டுகளாவது ஆகும். காத்திருக்க தயாரா?"

    "தயார். என்ன செய்யவேண்டும்"

    "குழந்தைகளுக்கு காபி மிட்டாய்களை அறிமுகபடுத்துங்கள். தினமும் அவர்கள் காபிக்கு பழக்கபடுத்தினால், திரவமாக அதை பின்னாளில் சந்தைப்படுத்துவது எளிது"

    நெஸ்கபே அதன்பின் காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பத்து ஆண்டுகள் பொறுத்திருந்து இன்ஸ்டன்ட் காபியை அறிமுகபடுத்த, இளைய தலைமுறையிடம் பெரிய ஹிட் ஆனது

    காபிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கொகோகோலா கம்பனி, கேன் வடிவில் ஜார்ஜியா ஐஸ் காபி எனும் பானத்தை அறிமுகபடுத்தியது. கேன்களில் கிடைத்த குளிர்ந்த ஐஸ் காப்பியை இளைஞர்கள் வாங்கி குடித்தார்கள். இன்று கொகோகோலாவை விட அதிகமாக விற்கும் பானமாக ஜார்ஜியா ஐஸ் காபி மாறியது

    பன்னாட்டு பிசினஸ்பிஸ்தாக்கள் நீண்டகால ஆட்டத்தை ஆடுவதில் கைதேர்ந்தவர்கள். ஆயிரமாயிரம் ஆண்டு வழக்கத்தை ஒரே தலைமுறையில் மாற்றுவது என்றால் சும்மாவா என்ன?

    பொறுத்தார் பூமி ஆள்வார்

    - நியாண்டர் செல்வன்

    Next Story
    ×