search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கவியரசு கண்ணதாசன்
    X
    கவியரசு கண்ணதாசன்

    பேராசிரியருக்கு கற்பித்த கண்ணதாசன்

    • திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது.
    • வானொலியில் நான் நிகழ்த்திய உரைக்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஃபோனை கீழே வைத்தேன்.

    கண்ணதாசனிடமிருந்து அப்படி ஒரு கேள்வியை அந்த கல்லூரிப் பேராசிரியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

    தனக்கு நடந்த நிகழ்வை அந்த பேராசிரியையே சொல்கிறார் இப்படி:

    "ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.

    இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரையை நிகழ்த்தினேன்.

    அது வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணிநேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன்.

    மறுமுனையில் 'நான் கண்ணதாசன் பேசுகிறேன்' என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. கண்ணதாசன் தொடர்ந்து பேசினார். 'சற்று முன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன். மிகவும் அருமையாக பேசியிருந்தீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் நல்ல பல விஷயங்கள், உங்களைப் போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.

    ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.

    உதாரணமாக திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 'நான் மனமாக இருந்து நினைப்பேன். நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும்.

    அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் அதையே நான் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா' என்று கண்ணதாசன் கேட்டார்."

    என்ன பதில் சொல்ல முடியும் கண்ணதாசனின் இந்த கேள்விக்கு?

    வானொலியில் நான் நிகழ்த்திய உரைக்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஃபோனை கீழே வைத்தேன்.

    "கண்ணதாசன் அப்படி சொன்னதைக் கேட்டது முதல் அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. ஏனெனில் அவர் என்னிடம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை."

    -ஜான் துரை ஆசிர் செல்லையா

    Next Story
    ×