என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
மரமும் மனிதனும்...
- மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.
- மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும்.
திருவள்ளுவர் ஓரிடத்தில் மனிதனை மரத்துக்கு ஒப்பிடுகிறார். பண்பில்லாதவனை மரத்துக்குச் சமமானவன் என்கிறார்.
"அரம்போலும் கூர்மையரேனும், மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்"
அரம் இரும்பையும் அராவி அழிக்கும் கருவி. அதைப் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், பண்பில்லாததவர்களாக இருந்தாலும், அவர்கள் மரத்துக்குச் சமமானவர்கள் என்கிறார்.
அறிவில்லாதது என்பதற்காக மரத்தைக் கூறுகிறாரே ஒழிய, மற்ற எல்லாவகையிலும் மரம் மனிதனிலும் சிறந்தே விளங்குகிறது.
மரம் உயிரோடு இருக்கும்போது இலை, பூ, காய், கனி என்று பல வகைகளில் உதவுகிறது. நிழல் தருகிறது, தூய காற்று வழங்குகிறது, மழை தருகிறது.
மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.
ஆனால், மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும். அதனால்தான் வள்ளுவர்,
"அன்றறிவாம் என்னாது அறம்செய்க"
என்கிறார். எதையும் அன்றைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று ஒத்திவைக்காதே என்று அறிவுறுத்துகிறார்.
இறந்தபின் கண்தானம், உடல்தானம், அறக்கட்டளை அமைத்து உதவுதல் போன்று உதவமுடியுமே என நினைக்கலாம்.
நம் பின்னோர் அதனை நிறைவேற்றுவதைப் பொறுத்து அது நிகழலாம், நிகழாமலும் போகலாம். வீட்டில் உள்ளோர் அதனை வழங்க மறுத்தால் நிகழமுடியாது.
மரம் இருந்தும் கொடுக்கும், இறந்தும் கொடுக்கும்.
எனக்குத் தெரிந்த ஒருவர், எப்போதும் யாருக்காவது கெடுதல் செய்தல் கொண்டே இருப்பார்.
ஒருவர் வசதியாக வாழ்வதைப் பார்த்துவிட்டால் அவருக்குத் தாங்காது. காவல்துறைக்கு மொட்டைக் கடிதம் போடுவார். அவர் கள்ளநோட்டு வீட்டில் அடிக்கிறார் என்று, வீடு முழுவதையும் காவலர்கள் இடித்துப் போட்டுத் தேடிவிட்டு பொய்ப்புகார் என்று முடிவுகட்டுவார்கள். ஆனாலும் இடித்ததைக் கட்டுவது வீட்டுக்காரர் பொறுப்புதானே!
திருடுபோன சாமி சிலைகள் ஒருவர் வீட்டில் ஒளித்துவைத்திருப்பதாக எழுதி அவருக்குத் தொல்லை தருவார்.
'மொட்டை பெட்டிஷன் மேதாவி' என்றே ஊரில் அவருக்குப் பெயர். அந்த மேதாவியின் இறுதிக்காலம் உடல் நலம் குன்றிப் படுக்கையில் கிடந்தார். ஊர்ப் பெரியவர்கள் வந்து சுற்றிலும் அமர்ந்து உடல் நலம் விசாரிக்கிறார்கள்.
அந்த மேதாவி, எல்லோரிடமும் தான் செய்த தவறுகளைக்கூறிவிட்டு "என்னைப் போன்று இனி ஒருவன் இப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், நாளை நான் இறந்ததும் என் உடலை காலில் கயிறுகட்டித் தெருவில் போட்டுச் சுடுகாட்டுக்கு இழுத்துப் போகவேண்டும். இழுத்துப் போகும்போதே எல்லோரும் இறந்த உடம்பைச் செருப்பால் அடித்தபடியே போகவேண்டும்.
இதனைச் செய்வதாக உறுதிமொழி கொடுத்தால்தான் நான் நிம்மதியாகச் சாவேன்" என்று பாவ மன்னிப்பு போலக் கேட்டார்.
எல்லோரும் சாவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே மறுநாள் மேதாவி இறந்துவிட்டார்.
சொன்னபடியே எல்லோரும் மேதாவியின் உடலைக் தெருவில் போட்டு இழுத்தனர். செருப்பால் அடித்தனர். ஆசை ஆசையாக அதனைச் செய்தார்கள்.
திடீரென்று போலீஸ் லாரி வந்து நின்றது, காவலர்கள் குதித்து ஓடிவந்தனர். இவர்களைப் பிடித்து உதைத்து லாரியில் ஏற்றிக் காவல் நிலையம் கொண்டுபோய் அங்கும் லத்திக் கம்பால் 'பூசை' போட்டனர்.
அப்போது அங்கிருந்த ஆய்வாளர், 'அந்த ஆளு சரியாத்தான் தந்தி குடுத்திருக்காரு' என் உடம்பை அவமானப்படுத்தனும்னு பேசிக்கிறாங்க, போலீஸ்காரங்கதான் உடம்புக்கு அவமானம் உண்டாகாமே காப்பத்தனும்னு, அவர் நினைத்தபடியேதான் இவனுங்களும் செய்றாங்க. நல்லா அடிங்கப்பா' என்று ஆவேசமாகக் கூறினார்.
அடிவாங்கியபடியே எல்லோரும் சொன்னார்கள். 'அவன் இருந்தும் கெடுத்தான்' செத்தும் கெடுத்தான்' என்று.
மரம் இருக்கும்போதும் கொடுக்கிறது!
உயிர்போன பிறகும் கொடுத்து உதவுகிறது.
சில மனிதர்கள், இருந்தும் கெடுக்கிறார்கள், இறந்தும் கெடுக்கிறார்கள்.
-புலவர் சண்முகவடிவேல்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்