search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு
    X

    முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு

    • ஆர்.எஸ்.பாரதி, திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
    • 10 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளை மீறப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.

    புதுடெல்லி:

    பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

    இது பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலில் உள்ளது.

    இதனை எதிர்த்து யூத்பார் ஈகூவாலிட்டி என்ற அமைப்பு உள்ளிட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தி.மு.க.வின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திரபட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் கொண்ட 5 பேர் அமர்வு விசாரித்து வந்தது.

    10 சதவீத இடஒதுக்கீட்டிற்காக மத்திய அரசு கொண்டு வந்த 103-வது சட்ட திருத்தம் அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மையை மீறியுள்ளதா? அல்லது அடிப்படை தன்மை மாறாமல் அதை ஒட்டியே நிறைவேற்றப்பட்டதா? என்ற கோணத்தில் 1973-ம் ஆண்டு கேசவா நந்தபாரதி வழக்கு தீர்ப்பை கருத்தில் கொண்டு விசாரித்தது.

    அதே போல் இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரத்தை அளவுகோளாக வைப்பது முறையா? என மண்டல் வழக்கு தீர்ப்பளித்த இந்திர ஷாவ்னே வழக்கையும் கருத்தில் கொண்டு விசாரணை நடந்தது.

    அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி சட்டத் திருத்தம் முறையானது என வாதாடினர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 பேர் அமர்வு இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

    அதன்படி பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்திவாலா ஆகிய 3 பேரும் தீர்ப்பு அளித்துள்ளனர்.

    பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    ஆனால் இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சட்ட விரோதம் என்று நீதிபதி ரவீந்திரபட் கூறியுள்ளார். நீதிபதி ரவீந்திரபட்டின் கருத்தை ஆதரிப்பதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறியுள்ளார்.

    இதன்படி நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்தி வாலா ஆகிய 3 பேரும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திரபட் ஆகிய இருவரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீர்ப்பு அளித்துள்ளனர். தீர்ப்பு விவரம் வருமாறு:-

    நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில் கூறியதாவது:-

    இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது அடிப்படை அரசியல் சாசன கட்டமைப்பை மீறுகிறதா என கேள்வி எழுகிறது. ஆனால் இந்த சட்ட திருத்தம் அடிப்படை அரசியல் சாசனத்தை மீறவில்லை. வளர்ச்சி என்பது அனைவருக்கும் ஒருமித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    மேலும் இடஒதுக்கீடு முறை 50 சதவீதத்திற்கு மேலாக இருக்கக்கூடாது என்பதை மீறவில்லை. ஏனெனில் இந்த இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதால் எந்த அடிப்படை கட்டமைப்புகளையும் மீறவில்லை.

    இடஒதுக்கீடு என்பது சமமான சமுதாயத்தின் இலக்குகளை நோக்கி அனைவரையும் அழைத்துச் செல்வதற்கான உறுதியான நடவடிக்கையின் ஒரு கருவியாகும்.

    குறிப்பாக சமூகத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் அனைத்து வகுப்பினரையும் முன்னேற்றுவதே ஆகும். எனவே அந்த அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிய சட்ட திருத்தம் செல்லும்.

    பொருளாதார ரீதியிலான வகைப்படுத்தலை வைத்து வழங்கப்பட்ட இந்த 10 சதவீத இடஒதுக்கீடு சரியானதே.

    மேலும் இந்த இட ஒதுக்கீடு சமத்துவத்துக்கான குறியீட்டை மீறவில்லை. ஏற்கனவே உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற கட்டமைப்பையும் மீறவில்லை.

    மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு பொருளாதார அளவுகோலை வைத்து சிறப்பு ஒதுக்கீடு முறையை உருவாக்குவது அடிப்படை கட்டமைப்பை மீறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீதிபதி பேலா திரிவேதி தனது தீர்ப்பில் கூறியதாவது:-

    பாராளுமன்றம் மக்களின் தேவைகளை அறிந்து இருக்கிறது. குறிப்பாக இட ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார ரீதியில் மக்களை ஒதுக்கி வைப்பதை அறிந்து தான் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை தவிர்த்து பிற பிரிவினருக்கும் சிறப்பு சலுகை வழங்க இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்துள்ளது. பாராளுமன்றத்தின் இந்த செயல் நியாயமான வகைப்பாடு ஆகும்.

    சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் பொதுவாக உள்ள அனைத்து இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே வேளையில் இ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு இடஒதுக்கீடு என்பது எந்த விதிகளையும், அடிப்படைகளையும் மீறவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீதிபதி பார்திவாலா தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    10 சதவீத இட ஒதுக்கீடு என்பதை ஏற்கிறேன். 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்ட திருத்தம் சரியே, அது செல்லும்.

    இடஒதுக்கீடு முறை குறிப்பிட்ட நலனுக்கானது என்பதை அனுமதிக்க முடியாது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் கல்வி, முன்னேற்றம் ஆகியவை பல்வேறு சமூக நிலையில் இருக்கும் மக்களிடையேயான இடைவெளியை குறைத்துள்ளது.

    எனவே முன்னேற்றம் அடைந்தவர்களை பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டும். அப்படி என்றால் தான் உண்மையாக பின் தங்கியவர்கள் பயன் பெறுவர்.

    பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் என்ற பிரிவை வகுக்கும், தீர்மானிக்கும் முறைகளை இன்றைய கால கட்டத்திற்கேற்ப மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு என்பது காலவரையறை இல்லாமல் தொடரக்கூடாது.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரியானதே, எனவே 103-வது சட்ட திருத்தம் செல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீதிபதி ரவீந்திர பட் கூறியதாவது:-

    இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீதம் வழங்கிய சட்டத் திருத்தம் செல்லும் என்ற பிற நீதிபதிகள் தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன்.

    10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் 103-வது சட்ட திருத்தம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கியுள்ள இட ஒதுக்கீடு தான் அவர்களை சிறப்பான உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

    தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் இதயத்தையே தாக்குவதாக உள்ளது.

    இட ஒதுக்கீடு 50 சதவீத்தை மீறக்கூடாது. ஆனால் தற்போது அதனை தாண்டி இட ஒதுக்கீட்டை அனுமதிப்பது என்பது மேலும் மீறல்களுக்கு வழி வகுக்கும்.

    தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது அங்குள்ள எஸ்சி, எஸ்.டி, ஓ.பி.சி உள்ளிட்ட மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பின்பற்றுவது ஆகும்.

    எஸ்.சி, எஸ்.டி , ஓ.பி.சி பிரிவினரை புறந்தள்ளி விட்டு இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தில் அனுமதிக்காத ஒரு விசயம் ஆகும்.

    மேலும் சின்ஹோஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் மொத்த எஸ்.சி மக்கள் தொகையில் 38 சதவீதம் பேரும், மொத்தமுள்ள எஸ்.டி, மக்கள் தொகையில் 48 சதவீதம் பேரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர் என கூறுகிறது. அப்படியெனில் இந்த பிரிவினரே பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் ஆவர்.

    இந்த இ.டபிள்யூ.எஸ். 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசன இதயத்தின் மீதான தாக்குதல். 10 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு எதிராக உள்ளது.

    அதேபோல் 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய உரிய அங்கீகாரம் இல்லாதவர்களுக்கானது என்பதை விடுத்து பொருளாதார அடிப்படையிலான நோக்கத்தை மாற்றுவதாக உள்ளது.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை அரசுகள் அறிமுகப்படுத்தலாம் என்பது செல்லாது. அந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு அளிக்கிறேன்.

    பொது நன்மைக்காக பொருளாதார அளவு கோல்கள் அனுமதிக்கப்படுவதாலும், இதில் பாகுபாடு காட்டப்படுவதாலும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக உள்ளதாலும் இந்த சட்டத்தை ரத்து செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    சட்ட திருத்தம் செல்லாது என்ற நீதிபதி ரவீந்திர பட் வழங்கிய தீர்ப்புடன் ஒத்துப்போகிறேன். இந்த சட்ட திருத்தம் செல்லாது என்பதே எனது தீர்ப்பு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தீர்ப்பில் 3 நீதிபதிகள் சட்டத்துக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

    எனவே பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×