search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேலையின்றி திண்டாடும் இளைஞர்கள் - 600 பணியிடங்களுக்கு 25000 பேர் போட்டி.. பகீர் வீடியோ
    X

    வேலையின்றி திண்டாடும் இளைஞர்கள் - 600 பணியிடங்களுக்கு 25000 பேர் போட்டி.. பகீர் வீடியோ

    • கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
    • விண்ணப்பத்தாரர்கள் உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.

    நாடு முழுவதும் வேலையின்மை பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. குறைந்தபட்ச காலியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் அவலம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் குஜராத்தின் அங்கலேஷ்வரில் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பிக்க முண்டியடித்தனர். தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மும்பை விமான நிலையத்தில் 600 காலி பணியிடங்களுக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    விமானத்தில் பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் பேக்கேஜ் பெல்ட்கள் மற்றும் ராம்ப் டிராக்டர்களை இயக்குதல். ஒவ்வொரு விமானத்திற்கும் பொருட்கள், சரக்கு மற்றும் உணவுப் பொருட்களைக் கையாள குறைந்தபட்சம் 5 பேர் தேவை.

    விமான நிலையத்தில் பொருட்களை ஏற்றிச் செல்வோரின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரம் பணி செய்து ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். வேலைக்கான கல்வி அடிப்படை தகுதி. ஆனால் விண்ணப்பத்தாரர்கள் உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.

    வேலைக்கு ஆட்கள் தேவை என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலுவலகத்தின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதையடுத்து, அனைவரின் சுயவிவரங்கள் அடங்கிய ரெஸ்யூம்களை வாங்கிக் கொண்டு, தகுதியுள்ளவர்களை நேர்முக தேர்வுக்கு அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதமேஷ்வர் என்பவர் நேர்காணலுக்காக 400 கிலோமீட்டர்கள் பயணம் செய்து வந்துள்ளார். ஹேண்டிமேன் பணிக்கு விண்ணப்பிக்க வந்துள்ளேன், ரூ.22 ஆயிரத்து 500 சம்பளம் தருவதாக கூறி இருந்தார்கள் என்றார். பிரதமேஷ்வர் பிபிஏ இரண்டாமாண்டு மாணவர் என்பதால் வேலை கிடைத்தால் படிப்பை நிறுத்திவிடுவீர்களா என்று கேட்டதற்கு, "என்ன செய்வது? வேலையில்லா திண்டாட்டம் அதிகம். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கூறினார்.

    பிஏ பட்டம் பெற்ற மற்றொருவர், தனக்கு ஒரு ஹேண்டிமேன் வேலையைப் பற்றி அதிகம் தெரியாது, ஆனால் "வேலை தேவை" என்று கூறினார். மற்றொருவர் ராஜஸ்தானின் அல்வாரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்துள்ளார். அவர் எம்காம் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அடிப்படைக் கல்வித் தேவையுள்ள வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். "நானும் அரசு வேலை தேர்வுக்கு தயாராகி வருகிறேன், இங்கு சம்பளம் நன்றாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னார். அதனால் வந்துள்ளேன்." என்றார்.

    Next Story
    ×