search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் பதவி ஏற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்
    X

    சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் பதவி ஏற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்

    • மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் நடந்து வருகிறது.

    நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' சிபாரிசு செய்வதற்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசு தாமதம் செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு குற்றம் சாட்டி வந்தது. கொலீஜியம் முறைக்கு எதிராக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே, கடந்த டிசம்பர் 13-ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் சிபாரிசு செய்தது. ஆனால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்தது.

    கடந்த வாரம் ஒரு வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். உடனே அட்டார்னி ஜெனரல், அந்த நியமனத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    அதையடுத்து, கடந்த 4-ந்தேதி, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, 5 நீதிபதிகள் நியமனத்தை அறிவித்தார்.

    ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.வி. சஞ்சய் குமார், பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி அசானுதீன் அமானதுல்லா, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 5 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    இத்துடன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆகும்.

    மீதியுள்ள 2 இடங்களுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த குமார் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் கடந்த மாதம் 31-ந்தேதி சிபாரிசு செய்தது. அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    Next Story
    ×