என் மலர்
இந்தியா

இந்தியா கூட்டணி தொடர 65 சதவீதம் பேர் ஆதரவு- கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

- கணக்கெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 26 சதவீதம் பேர் இந்தியா கூட்டணி கலைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.
- ராகுல் காந்தி தான் இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக இருக்க வேண்டும் என 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக இந்தியா டுடே-சிவோட்டர் மூட் ஆப் தி நேசன் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பை நடத்தின.
கடந்த மாதம் 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 123 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜ.க. கூட்டணி 343 இடங்களை கைப்பற்றும் எனவும், இதில் பா.ஜ.க. மட்டும் 281 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் இந்தியா கூட்டணிக்கு 188 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது காங்கிரஸ் 78 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி தொடர வேண்டும் என 65 சதவீதம் பேர் விரும்புகிறார்கள் என்பதும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் கணக்கெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 26 சதவீதம் பேர் இந்தியா கூட்டணி கலைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க பொருத்தமான தலைவர் யார் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தான் இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக இருக்க வேண்டும் என 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு 14 சதவீதம் பேரும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 சதவீதம் பேரும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.